
டியூஷனுக்குச் சென்ற 6 வயது சிறுமி காரில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அச்சிறுமி கொல்லம் ஆசிரமம் மைதானத்தில் மீட்கப்பட்டார்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள ஓயூர் பகுதியை சேர்ந்தவர் ரெஜி. இவரது மனைவி சிஜி. இவர்களுக்கு ஜோனதன்(9) என்ற மகனும், அபிகேல் சாரா (6) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், வழக்கம் போல மாலையில் டியூசனுக்கு சென்றுள்ளனர். அப்போது காரில் வந்த கும்பல் திடீரென சிறுமியை மட்டும் கடத்தி சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மாநிலம் முழுவதும் அலர்ட் செய்யப்பட்டு சிறுமியை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில் சிறுமியை கடத்த பயன்படுத்திய கார் அடையாளம் காணப்பட்டது. ஆனால் அதில் போலி பதிவு எண் என்பது தெரியவந்தது.
இந்நிலையில் சிறுமியின் தாய்க்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய பெண், உங்களின் மகள் எங்களிடம் பத்திரமாக இருக்கிறார். அவரை மீண்டும் உங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றால் ரூ.5 லட்சம் தரவேண்டும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். அந்த போனின் எண்ணை வைத்து உரிமையாளரின் முகவரியை கண்டுபிடித்து அங்கு சென்றனர். ஆனால் கடத்தல் கும்பல் அங்கிருந்த ஒருவரிடம் போன் வாங்கி பேசியது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் பிடியில் இருந்து இனி தப்பிக்க முடியாது எண்ணிய கடத்தல் கும்பல் அந்த சிறுமியை விட்டு விட்டு சென்றுள்ளது. பின்னர் அந்த சிறுமி கொல்லம் ஆசிரமம் மைதானம் அருகே மீட்கப்பட்டதை அடுத்து குழந்தை கொல்லம் கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.