
அரசு வங்கிகள் ஏற்கனவே வாராக்கடனில் சிக்கித் தவித்து வரும் நிலையில், இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் ரூ.55 ஆயிரத்து 356 கோடி கடனை தள்ளுபடி செய்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை ஐ.சி.ஆர்.ஏ. என்ற கடன் தரமதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே முதல் 6 மாத காலத்தில் ரூ. 35 ஆயிரத்து 985 கோடி கடனை அரசு வங்கிகள் தள்ளுபடி செய்தன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 54 சதவீதம் அதிகமாகும்.
வங்கிகளிடம் கடன் பெறும் பெரு நிறுவனங்கள், தொழிலதிபர்கள் அதை திருப்பிச் செலுத்தாததால், வாராக்கடன் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நிறுவனம் சில தகவல்களை பெற்றுள்ளது. அதில், 2007-08ம் ஆண்டு முதல் 2015-16ம் ஆண்டுவரை கடந்த 9 ஆண்டுகளில் அரசு வங்கிகள் ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்து 253 கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
2016-17ம் நிதியாண்டிலும், நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதத்திலும் , ரூ. ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 659 கோடி கடனை அரசு வங்கிகள் கடனை தள்ளுபடி செய்துள்ளன. இதோடு சேர்க்கும் போது, கடந்த 10 ஆண்டுகளில் அரசு வங்கிகள் ரூ. 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளன.
இப்போதுள்ள நிலைமை தொடர்ந்தால், நடப்பு நிதியாண்டில் அரசு வங்கிகள், ரூ. ஒரு லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யலாம் எனத் தெரிகிறது. இந்த நிதியாண்டின் ஜூன் மாதம் முடிந்த காலிறுதியில் ரூ.25 ஆயிரத்து 573 கோடியும், செப்டம்பர் காலிறுதியில் ரூ.29 ஆயிரத்து 783 கோடி கடனையும் அரசு வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன.
இது குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், “ செயல்படா சொத்துக்கள் அல்லது வாராக்கடன்களை அவ்வப்போது வங்கிகள் தங்களின் ‘பேலன்ஸ் ஷீட்டில்’ இருந்து நீக்குவது இயல்பு அந்த அடிப்படையில்தான் நீக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் முன்னாள் இயக்குநர் எம். நரேந்திரா கூறுகையில், “ கடன் தள்ளுபடி என்பது, வங்கியின் வரவு செலவு கணக்குப் புத்தகத்தில் தொழில்நுட்ப ரீதியாக எழுத்தப்படும் குறிப்பாகும். வங்கிகள் எதையும் இழக்கவில்லை. எந்த சொத்தையும் வங்கிகள் இழக்கவில்லை. இந்த கடனை வேறு விதமான விதத்தில் வசூலிக்கும்’’ என்றார்.
இதே நிலை நீடித்தால், இந்த நிதியாண்டு இறுதியில் ஒட்டுமொத்தமாக வங்கிகளின் வாராக்கடன் ரூ.9 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.