
நடிகர், நடிகர்களைக் பார்த்தாலும், கோயிலுக்கு சாமி கும்பிட சென்றாலும்... ஏதோ ஒரு அசம்பாவித நிகழ்வைக் கண்டாலும்... உடனே நம் செல்போனை எடுத்து படமெடுக்கும் வியாதி மனித மனங்களில் பரவி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட இசக்குமுத்துவின் குடும்பத்தை காப்பாற்றாமல், முதலில் படம் பிடித்த பிறகே அவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபோன்ற நிகழ்வுகள் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில், இளைஞர் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை, அருகில் இருந்தோர் தங்கள் செல்போன்களில் படம் பிடித்த சம்பவம் ஒன்று டெல்லியில் நடந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று டெல்லியில் உள்ள சாகுர் பாஸ்தி ரயில் நிலையத்துக்கு இருபது வயது இளைஞர் ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது அவர், சோகமாக காணப்பட்டுள்ளார். திடீரென அந்த இளைஞர், தான் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடல் முழுதும் ஊற்றிக் கொண்டார். மேலும், தீப்பெட்டியை எடுத்து நெருப்பை பற்ற வைத்துக் கொண்டார்.
நெருப்பை பற்ற வைத்துக் கொண்ட இளைஞர், வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். தன்னைக் காப்பாற்றும்படியும் அங்கிருப்பவர்களிடம் கெஞ்சியுள்ளார். ஆனால், அங்கிருந்தவர்களோ, இளைஞரைக் காப்பாற்றுவதற்கு பதிலாக தங்கள் செல்போனில் படம் பிடித்து கொண்டுள்ளனர்.
தீ வைத்துக் கொண்ட இளைஞருக்கு, அவர்கள் ஏதும் உதவி செய்ததாக தெரியவில்லை... இளைஞரின் உடல் முழுதும் எரிந்த பிறகே, அதாவது 3 மணி நேரத்துக்குப் பிறகே அந்த இடத்துக்கு போலீசார் வந்தனர். இதையடுத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்யாமல், செல்போனில் படம் பிடிக்கும் இந்த மனநோய் எப்போது நீங்குமோ...?