
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு இன்றே கடைசி நாள் என ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதையடுத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இதையொட்டி 500 மற்றும் 1000 ரூபாய் வைத்துள்ளவர்கள், பெட்ரோல் பங்க் மற்றும் கடைகளில் சில்லறையாக மாற்ற முயன்றனர். ஆனால், கிடைக்கவில்லை. இதையடுத்து பெட்ரோல் பங்க்களில் சில்லறைக்காக சென்றனர். ஆனால், கொடுக்கும் பணத்துக்கு அப்படியே பெட்ரோல், டீசல் போட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதற்கிடையில், ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மத்திய அரசு கால அவகாசம் கொடுத்தது. மேலும், வங்கிகளில் பணத்தை மாற்றி கொள்ளலாம் எனவும் அறிவித்தது. இதையொட்டி வங்கிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசின் அறிவிப்பு இன்றுடன் முடிகிறது. நாளை முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வாங்க மாட்டோம் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பெட்ரோல் – டீசல் விற்பனை நிலையங்களில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் இன்று வரை ஏற்றுக்கொள்ளப்படும். அரசின் முடிவை தொடர்ந்து இந்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்படுகிறது.
ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் இனி செல்லாது என்ற அறிவிப்பால் வடமாநில லாரி டிரைவர்கள் ஆங்காங்கே லாரிகளை நிறுத்திவைத்துள்ளனர். அவர்களிடம் சில்லரை இல்லாத காரணத்தால் பசிக்கொடுமையால் வாடி வருகின்றனர்.
அந்தவகையில் சென்னையை அடுத்த சோழவரம் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தவித்து வந்த வடமாநிலங்களைச் சேர்ந்த லாரி டிரைவர்களுக்கு கடந்த 9ம் தேதி முதல் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.