
ஆட்சியை பிடிக்கப் போவது யார்? உத்தரபிரதேசம் உட்பட 5 மாநில சட்டப் பேரவை வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடக்கம்..
உத்தரபிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது இன்று பிற்பகலுக்குள் தெரியவரும்.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு கடந்த மாதம் 4–ந் தேதி தொடங்கி, மார்ச் 8–ந் தேதி வரை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.
வரும் ஜூலை மாதம் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த 5 மாநிலங்களிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. உத்தரபிரதேசத்தில் 78 மையங்களிலும், உத்தரகாண்டில் 15 மையங்களிலும், பஞ்சாப்பில் 54 மையங்களிலும், கோவாவில் 2 மையங்களிலும், மணிப்பூரில் 9 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மட்டும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் மத்திய படையினரின் பாதுகாப்பும், மையங்களுக்கு வெளியே மாநில போலீசாரின் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
5 மாநில சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில நிமிடங்களில் முன்னிலை நிலவரங்கள் தெரியத்தொடங்கும். ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது பிற்பகலுக்குள் தெரியவரும்.