
பிரதமர் மோடி அறிவித்த பிரசவ உதவி திட்டத்தின் பயன்கள் முதல் குழந்தைக்கு மட்டும்தான் வழங்கப்படுமா என்பது குறித்து இன்னும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என, மத்திய அரசு அறிவித்து உள்ளது.
2010-ம் ஆண்டு முதல் நாட்டில் உள்ள 56 மாவட்டங்களில் பிரசவ உதவி திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ரூ.6 ஆயிரம் உதவி
கடந்த டிசம்பர் 31-ந் தேதி, புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது இந்த பிரசவ உதவி திட்டம், நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தார்.
இந்தத் திட்டத்தின்படி, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பல்வேறு முன் நிபந்தனைகளின் அடிப்படையில் ரூ.6 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படும்.
முதல் குழந்தைக்கு மட்டுமா?
முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டும்தான் இந்த உதவித் தொகை வழங்கப்படும். இந்த நிலையில்,
நேற்று மாநிலங்கள் அவையில் பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி, பிரதமர் மோடி அறிவித்த இந்த திட்டத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
முதல் குழந்தைக்கு மட்டும்தான் இந்தத் திட்டத்தின் பயன் கிடைக்குமா? என்று கேட்டதற்கு, அது தொடர்பாக மத்திய அரசு இன்னும் முடிவு எதுவும் எடுக்கவில்லை என்றும், மேனகா காந்தி பதில் அளித்தார்.