
‘ஆரம்பமெல்லாம் நல்லாதான் இருக்கு, ஆனா உங்கிட்ட பினிஷிங் சரியில்லையேப்பா’ என்று நீளும் வடிவேலுவின் காமெடி டயலாக் ஒன்று. அந்த பாணியில், இந்திய மண்ணில் சரசரவென பற்றிய 4ஜி அலை தீயை ‘நச்சக்’கென்று அமுக்கியிருக்கிறது வைரலாகப் பரவிவரும் ஒரு தகவல்.
பெரியண்ணன் அமெரிக்கா அளவுக்கு இல்லேன்னாலும், ஆசியா கண்டத்துல நானும் ஒரு தலைவன் தான் என்ற ரேஞ்சில கெத்து காட்டுவது இந்தியாவின் ஸ்டைல். ரொம்பநாளா மெயிண்டெய்ன் ஆயிட்டிருந்த இந்தியாவோட ஸ்டேட்டஸ், ஒரே ஒரு தகவலால அதலபாதாளத்துக்குப் போயிருக்கு. வேற ஒண்ணுமில்லீங்க, இந்தியாவுல தொழில் நுட்ப வளர்ச்சி எந்த நிலைமையில இருக்குங்கற கேள்விக்கு விதை போட்டிருக்குது அமெரிக்காவை சேர்ந்த ஓபன் சிக்னல் என்கிற நிறுவனம்.
‘உங்களுக்கு சப்ஸ்கிரைபர்ஸ் அதிகம், ஆனா ஸ்பீடு கம்மி’ என்று இந்தியாவின் 4ஜி சேவையின் தரம் பற்றி தனது அறிக்கையின் மூலம் குட்டு வைத்திருக்கிறது ஓபன் சிக்னல். எள்ளுன்னா எண்ணெயா வெடிக்குற மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு, இந்த மேட்டர் போதாதா?! இதுதான் சாக்குன்னு பிரிச்சு மேய ஆரம்பிச்சாட்டாங்க!
விஷயம் ரொம்ப சிம்பிள். உலகத்துல 4ஜி பயன்படுத்துற 75 நாடுகள்ல, ஒரு சர்வே நடத்தியிருக்கு ஓபன்சிக்னல். அதுல கிடைச்ச தகவல்படி, இந்தியாவுல 4ஜி பயன்படுத்துறவங்க எண்ணிக்கை மூலமா உலகளவுல 15வது இடத்துல இருக்கு. ஒரு சில வருஷங்கள்ல இந்த அளவுக்கு முன்னேறியிருக்கறது பெரிய சாதனை அப்படின்னு சொன்ன ஓபன் சிக்னல், கூடவே இந்தியாவுல இருக்குற 4ஜி ஸ்பீடு எப்பூடிங்கறதையும் புட்டு வச்சிருச்சு. அதாகப்பட்டது, இந்தியாவுல கிடைக்குற 4ஜி சேவையோட டவுன்லோட் வேகம் 5.14 Mbps தானாம். ஆனா உலகளவுல சராசரி டவுன்லோட் வேகம் 16.2 Mbps ஆக இருக்குதாம்.
’சராசரியை விட கீழ இருக்குறோமா, சரி பரவாயில்ல’ அப்படின்னு நம்மை மனசை தேத்திக்க முடியாது. காரணம், நமக்கு பக்கத்துல இருக்குற பாகிஸ்தான்ல 11.71 Mbps வேகத்துலயும் இலங்கையில 10.42 Mbps வேகத்துலயும் 4ஜி இயங்குதாம்!
நம்ம வீட்ல தவிட்டை தடவிக்கிட்டிருக்கும்போது, பங்காளி வீட்ல சோறு கொதிச்சா சும்மா இருக்க முடியுமா? அதான், நம்மாளுங்க பொங்கிட்டாங்க.. தொழில்நுட்ப வளர்ச்சியில நாமதான் கெத்துன்னு பார்த்தா, இப்படி வெத்தாக்கிட்டாங்களே என்ற சோகத்தில்
’அவ்வ்வ்..’ என்று புலம்பி வருகிறார்கள்.
என்னங்க பண்றது.. போன வாரம் ராஜஸ்தான் மாநில அமைச்சர் அர்ஜூன் ராம் பைகானீர் மாவட்டத்துக்குப் போனப்போ, அவர் போன்ல சிக்னல் இல்லை. அங்கயிருந்து போன்ல பேச வழியில்லாம, ஏணி போட்டு மரத்து மேல ஏறிப்பேசினார்.
அமைச்சரே சிக்னல் வருதான்னு அண்ணாந்து பார்க்குறப்போ, டவுன்லோட் ஸ்பீட் டான்னு இருக்கணும்ன்னு நெனைச்சா எப்பூடி..?!
அப்புறம் ஒரு எக்ஸ்ட்ரா மேட்டர், சிங்கப்பூர்ல 4ஜி டவுன்லோட் ஸ்பீடு 45.62 Mbps ஆக இருக்குதாம்.. ’ஆஹான்’னு சொல்றதை தவிர, வேற பதிலேதும் இப்போதைக்கு இல்ல!