
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (SMVDIME), நடப்பாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையில் முஸ்லிம் மாணவர்கள் அதிக அளவில் சேர்க்கப்பட்டதற்கு பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ரியாசி மாவட்டத்தில் பல்வேறு வலதுசாரி அமைப்புகள் இது தொடர்பாகப் போராட்டங்களை நடத்திய நிலையில், தற்போது பாஜகவும் தனது மவுனத்தைக் கலைத்து இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மா தலைமையிலான பாஜக குழுவினர், சனிக்கிழமையன்று துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை நேரில் சந்தித்தனர். அப்போது, மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை விதிமுறைகளை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி மனு அளித்தனர்.
2025–26 கல்வியாண்டிற்கான முதல் எம்பிபிஎஸ் (MBBS) மாணவர் சேர்க்கைப் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் மொத்தம் உள்ள 50 இடங்களில், 42 இடங்கள் முஸ்லிம் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதுவே சர்ச்சைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
வைஷ்ணவி தேவி கோயிலுக்கு வரும் பக்தர்களின் காணிக்கை மற்றும் நன்கொடை பணத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தில், இந்துக்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பல்வேறு இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும், சமூக ரீதியிலான இடஒதுக்கீட்டை வழங்க ஏதுவாக, இந்த நிறுவனத்தை 'சிறுபான்மை கல்வி நிறுவனமாக' (Minority Institution) அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து உதம்பூர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ ஆர்.எஸ்.பதானியா தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில், "ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி பக்தர்களின் பக்தி மற்றும் காணிக்கையில் இருந்து கட்டப்பட்ட நிறுவனங்கள், கோயிலின் புனிதத்தன்மையைப் பிரதிபலிப்பதாக முழுமையாகச் செயல்பட வேண்டும். இதற்கு ஷ்ரைன் போர்டு சட்டம் மற்றும் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தங்கள் இப்போது அவசியமாகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
யுவ ராஜ்புத் சபா, ராஷ்டிரிய பஜ்ரங் தளம் மற்றும் கல்கி இயக்கம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பல்கலைக்கழகத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஷ்டிரிய பஜ்ரங் தள தலைவர் ராகேஷ் பஜ்ரங்கி இது பற்றிக் கூறுகையில், "முதல் அணியில் உள்ள 50 மாணர்களில் வெறும் 7 பேர் மட்டுமே இந்துக்கள் மற்றும் ஒருவர் சீக்கியர். மீதமுள்ள 42 மாணவர்கள் முஸ்லிம்கள் என்பது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்துக்களின் நன்கொடையில் கட்டப்பட்ட கல்லூரியில், அந்த சமூகத்தின் நலனுக்காகவே பணம் செலவிடப்பட வேண்டும். எனவே, தற்போதைய சேர்க்கையை ரத்து செய்துவிட்டு, இந்துக்களுக்குப் போதிய இடஒதுக்கீடு வழங்கக் கூடிய வகையில் புதிய சேர்க்கை செயல்முறையைத் தொடங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளையில், மாணவர் சேர்க்கை முற்றிலும் தகுதி (Merit) அடிப்படையிலேயே நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SMVDIME நிறுவனத்திற்கு இன்னும் சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படாததால், மத ரீதியிலான எந்தவொரு இடஒதுக்கீட்டையும் அமல்படுத்த முடியாது என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
ஷ்ரைன் போர்டு தலைவராக உள்ள துணை நிலை ஆளுநர் இதில் உடனடியாகத் தலையிடாவிட்டால், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாகப் போராட்டக் குழுவினர் எச்சரித்துள்ளனர்.