
தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூடுகளால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமைதி இழந்து தொடர்ந்து பதற்றத்துடனே காணப்பட்டு வருகிறது.
ஹந்த்வாரா மாவட்டம் நவ்ஹாம் பகுதியில் கடந்த 20 ஆம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் நடைபெற்ற அடுத்த 36 மணி நேரத்தில் அதே பகுதியில் மீண்டும் ஒரு ஊடுருவல்... துப்பாக்கி, கையெறி குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர்.
பதில் தாக்குதல் நடத்தப்பட்டதில் அந்த இரண்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். மேற்கண்ட இரண்டு தாக்குதல்களிலும் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இதற்கிடையே இன்றும் நவ்ஹாம் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தீவிரவாதிகள் ஊடுவியிருப்பதை அறிந்த ராணுவத்தினர், சந்தேகத்திற்கு இடமான பகுதியை நோக்கி, அதிநவீன ஆயுதங்கள் மூலம் சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் நீடித்த இச்சண்டையின் இறுதியில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.