36 மணிநேர சண்டையில் 4 தீவரவாதிகள் சுட்டுக் கொலை..!!! இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம்...

First Published May 21, 2017, 9:49 PM IST
Highlights
4 terrorist dead in gun shoot in 36 hours fight


காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள நவுகாம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் கடந்த  36 மணிநேரம் நீடித்த பயங்கர துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராணுவத்தினர் 3 பேர் வீர மரணம் அடைந்தனர்.

காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டுவருவது தொடர் கதையாகி வருகிறது. இந்த அத்துமீறலுக்கு இந்திய ராணுவத்தினர் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

எல்லையில் ஊடுறுவலில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல், காஷ்மீரில் உள்ள இளைஞர்களுக்கு நிதியுதவி ெசய்து, பாதுகாப்பு படையினருக்கு எதிராக குழப்பத்திலும், கலவரத்திலும் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபடச் செய்கிறது. இதை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சுட்டிக் காட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்  இந்தியாவுக்குள் ஊடுருவி வந்த பாகிஸ்தான் வீரர்கள், 2 இந்திய ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்று, அவர்களது தலையைத் துண்டித்து வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் இருந்தே இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டில் இதுவரை 67 முறை பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.  இதில் அதிகபட்சமாக ஏப்ரல் மாதம் 26 முறையும் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜனவரி முதல் ஏப்ரல் வரை இந்திய ராணுவத்தினர் நடத்திய பதிலடியில் 27 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காஷ்மீரின் வடபகுதியில் உள்ள குப்வாராமாவட்டம், நவுகாம் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் இருந்து நேற்று முன் தினம் தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றனர்

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு  படையினர் இதை பார்த்து, துப்பாக்கி சூடு நடத்தினர். அதற்கு பதிலடியாக தீவிரவாதிகளும் தங்களின் நவீன துப்பாக்கிகளால் பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்டனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே கடுமையாக துப்பாக்கிச் சண்டை நடந்து பெரும் பதற்றமான சூழல் நிலவியது. 

இதையடுத்து நவுகாம் பகுதியில் அதிக அளவிலான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, தாக்குதலை தீவிரப்படுத்தினர். 

இந்த துப்பாக்கிச் சண்டையில், 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். அதேசமயம், தீவிரவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையின் 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 

தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான துபாபாக்கிச்சண்டை நேற்று அதிகாலை வரை நீடித்தது. 36 மணிநேர துப்பாக்கிச் சண்டைக்கு பின், நேற்று காலை மேலும், 2 தீவிரவாதிகளை, பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். மேலும், ஒரு பாதுகாப்பு படை வீரர் வீர மரணம் அடைந்தார்.

இதனால், நவுகாம் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.  கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து 4 நவீன ரக தானியங்கி துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். 

இது குறித்து பாதுகாப்பு படையினர் தரப்பில் கூறுகையில், “ நவுகாம் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுபகுதியில்  அத்துமீறி நுழைய முயன்ற தீவிரவாதிகள் 4 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்புபடையைச் சேர்ந்த 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அங்கு தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறோம்’’ எனத் தெரிவித்தனர்.

click me!