
திருப்பதி - பூரி விரைவு ரயிலில் எரிவாயு சிலிண்டர் வாடை வீசியதால் பயணிகள் அலறி கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் எரிவாயு சிலிண்டர் கொண்டு செல்ல முயன்ற 3 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதியில் இருந்து பூரிக்கு விரைவு ரயில் இன்று காலை 10 மணியளவில் புறப்பட்டது. இந்த ரயில் ரேணி குண்டா ரயில் நிலையம் வந்தபோது, ரயிலுக்குள் திடீரென கேஸ் கசிவதற்கான வாடை வீசி உள்ளது.
பயணிகள் தங்களுக்குள், யாரேனும் கேஸ் சிலிண்டர்கள் ஏற்றியுள்ளனரா என்று சோதித்துள்ளனர். அப்போது, ரயில் படிக்கட்டு அருகே கேஸ் சிலிண்டர்கள் இருப்பதைக் கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சிலிண்டரில் இருந்துதான் கேஸ் வெளியேறியுள்ளது. இதனால் பயந்துபோன ரயில் பயணிகள் அலறி அடித்து கூச்சலிட்டனர். மேலும, அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.
இதையடுத்து, ரயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட ரயில்வே பெட்டிக்கு வந்தனர். ரயிலில் சிலிண்டர் இருப்பது குறித்து பயணிகள் அவர்களிடம் தெரிவித்தனர்.
ரயில்வே போலீசார், சிலிண்டர்கள் யாருடையது என்று விசாரித்துள்ளனர். ஆனால், பயணிகள் யாரும் தெரியாது என்று கூறியுள்ளனர். இதனால் குழப்பமடைந்த போலீசார், கூலித்தொழிலாளிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது, இந்த சிலிண்டர்களைக் கொண்டு வந்தது, தாங்கள்தான் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
கூலித்தொழிலாளிகள் குமார், சண்டி, கோபி ஆகிய 3 பேரையும் ரயில்வே போலீசார் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில்களில் எளிதில் பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச்செல்ல தடைவிதிக்கப்பட்டும், கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.