இடிபாடுகளில் இருந்து மீட்க வந்த மீட்புப் படையினரை தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் கட்டித் தழுவி நன்றி தெரிவித்ததாக மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்கள் கூறுகின்றனர்.
இடிந்து விழுந்த உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக வெளியே வந்துள்ளனர். அவர்களைக் காப்பாற்ற கைகளால் எலிவளை துறையிடும் முறையில் இடிபாடுகளை அகற்றும் கடினமான பணியை மேற்கொண்ட மீட்புப் பணியாளர்கள் ஹீரோக்களாக உருவெடுத்தனர்.
மூச்சு விடுவதற்குக்கூட சவாலாக இருக்கும் இறுக்கனான இடத்தில் எலிவளை துளையிடல் முறை தேர்ச்சி பெற்றவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மிகவும் சோர்வை அளித்த அந்தப் பணியின் இறுதியில் தொழிலாளர்களின் முகத்தைப் பார்த்ததும் புன்னகை ஏற்பட்டது.
"தொழிலாளர்கள் எங்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் எங்களைக் கட்டிப்பிடித்து, பாதாம் பருப்பு வழங்கினர்" என்று மீட்பு பணியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான தேவேந்திரா கூறியுள்ளார்.
ஆகர் என்ற உயர் தொழில்நுட்ப துளையிடும் இயந்திரம் இறுதி நேரத்தில் பழுதடைந்ததை அடுத்து, மீட்புப் பணியாளர்கள் எலிவளை துளையிடல் முறையில் வல்லுநர்களின் உதவி நாடப்பட்டது. அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக, சிறிய கருவிகளைக் கொண்டு கைகளாலேயே துளையிடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
"சிக்கிய தொழிலாளர்களை வெளியே கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். 24 மணிநேரமும் உழைத்து அவர்களை வெளியே கொண்டு வந்திருக்கின்றனர்," என்று மீட்புக் குழுவின் தலைவர் கூறுகிறார்.
நவம்பர் 12 அன்று, சில்க்யாரா பகுதியில் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 4.5 கி.மீ. நீள சுரங்கப்பாதையில் 205 முதல் 260 மீட்டர் வரையிலான பகுதி இடிந்தது. இதனால் 260 மீட்டருக்கு அப்பால் இருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கக்கொண்டனர்.
17 நாள் கழித்து இன்று வெளியே வந்த தொழிலாளர்கள் ஆம்புலென்ஸ் வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு குறைந்தது ஒருநாள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D