
பொய்யான தகவல்களைப் பரப்பியதாக இன்று 22 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. இந்தியாவில் பல்வேறு யூடியூப் சேனல்கள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றில் இந்திய இறையாண்மை மற்றும் சமூக அமைதியை குலைக்கும் விதமான கருத்துகளை வெளியிடும் சேனல்களை கண்டறிந்து மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் முடக்கி வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் 35 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியது. மேலும் உளவுத்துறையின் பரிந்துரையின் அடிப்படையில் நாட்டிற்கு எதிராக போலி கருத்துகள், வெறுப்பு பேச்சுகளை வெளியிட்ட சமூக வலைதள கணக்குகள், இணைய செய்தி தளங்கள் உள்ளிட்டவை முடக்கப்பட்டன. இந்த நிலையில் பொய்யான தகவல்களைப் பரப்பியதாக இன்று 22 யூடியூப் சேனல்களை முடக்கி மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தேச பாதுகாப்பு குறித்து இந்த சேனல்கள் தவறான தகவல்களைப் பரப்பியதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தடை செய்யப்பட்ட 22 சேனல்களில் 18 சேனல்கள் இந்தியாவை சேர்ந்தவை. 4 சேனல்கள் பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படுபவை. கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையில் தற்போது முதன் முறையாக இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் ராணுவ அமைப்பு, ஜம்மு காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு இந்திய விவகாரங்கள் குறித்து, பல யூ டியூப் சேனல்கள் தவறான தகவல்களை பரப்பியுள்ளன.
இவை அனைத்தும் தேச விரோதமான மைய கருத்துக்களை உள்ளடக்கியவை. இவற்றில் பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் யூ டியூப் சேனல்களும் அடங்கும். பொய்யான தகவல்களை பரப்பிய யூ டியுப் சேனல்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வந்தன. உக்ரைன் பிரச்சனை தொடர்பாகவும் சில இந்திய யூ டியூப் சேனல்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. இந்தியாவின் வெளியுறவு கொள்கைகள், உலக நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் உறவு ஆகியவற்றின் மீது, அவதூறு பரப்பும் நோக்கத்தோடு இவை வீடியோக்களை பதிவிட்டுள்ளன என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.