
தெலுங்கானா மாநிலத்தில் 15 வயது மகன் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானது பார்த்து, கொதித்து எழுந்த தாய் மகனை கம்பத்தில் கட்டி வைத்து முகத்தில் மிளகாய் தூளை தேய்த்து விசித்திரமான தண்டனையை வழங்கி இருக்கிறார். இந்த சம்பவம் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
விருந்து:
சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் பி.டெக். படிக்கும் மாணவர் ஒருவர் போதை தலைக்கு ஏறிய நிலையில் உயிரிழந்தார். இதே வாரம் போதை பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் சுமார் 150 பேரை ஐதராபாத் காவல் துறை அதிகாரிகள் கைது செய்தனர். நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த போதை விருந்தில் முன்னணி நடிகர் சிரஞ்சீவி சகோதரரும், நடிகருமான நாகபாபு மகள் நிஹாரிகா உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
தெலுங்கானா மாநிலத்தில் போதை பொருளை ஒழிப்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கிறது. சமீபத்தில் தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் மாநிலத்தில் போதை பொருள் புழக்கம் மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆத்திரம்:
இந்த நிலையில், தனது மகன் போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதை கண்டு அதிர்ந்து போன ரமனா மகனிடம் அந்த தீய பழக்கத்தை கைவிட கோரி பலமுறை எடுத்துக் கூறி இருக்கிறார். எனினும், மகன் போதை பொருள் பழக்கத்தை கைவிடுவதாக தெரியவில்லை. கடந்த ஒரு ஆண்டாக பலமுறை எடுத்துக் கூறியும், மகன் தொடர்ந்து போதை பொருள் பயன்படுத்தி வந்ததை கண்டு தாய் ரமணா கடும் கோபத்திற்கு ஆளானார்.
இதை அடுத்து மனமுடைந்த தாய் ரமணா தனது மகனை மின்கம்பம் ஒன்றில் கட்டி வைத்து மிளகாய் தூளை மகன் முகம் மற்றும் கண்களில் தேய்த்தார். இனி போதை பொருளை பயன்படுத்த மாட்டேன் என மகன் கூறியதை அடுத்து தாய், அவனை கீழே இறக்கி விட்டுள்ளார்.
போதை பழக்கம்:
திரை பிரபலங்கள், அதிகாரிகளின் வாரிசுகள் என பலரும் போதை பழக்கத்திற்கு ஆளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகனும் இதே போன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியது.