
காஷ்மீரில் விடிய விடிய நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். போலீஸ்காரர் ஒருவர் இதில் வீர மரணம் அடைந்தார்.
தீவிரவாதிகள்
தெற்கு காஷ்மீரின் டிரால் நகரில் உள்ள தச்சுத் தொழிலாளி ஒருவர் வீட்டில் இரு தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக போலீஸ் மற்றும் ராணுவ படையினர் அங்கு விரைந்தனர். நேற்று முன்தினம் மாலை 7 மணி அளவில், தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடம் அடையாளம் காணப்பட்டது.
2 தீவிரவாதிகள் பலி
அதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை மூண்டது. நேற்று காலை வரை, விடிய விடிய இந்த துப்பாக்கிச் சண்டை நீடித்தது.
இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் ‘ஹிஸ்புல் முஜாகுதீன்’ இயக்கத்தை சேர்ந்த அகுயிப் மவுல்வி என்று அழைக்கப்படும் அகுயிப் பாத்.
பாகிஸ்தானை சேர்ந்தவர்
கடந்த மூன்று ஆண்டுகளாக, இவர் அந்தப் பகுதியில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். சுட்டுக்கொல்லப்பட்ட மற்றொரு தீவிரவாதி, ஒசாமா என்கிற சயிப்-உல்-லா என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த ஒசாமா, ‘ஜெய்ஸ் இ மொகமத்’ தீவிரவாத இயக்கத்தில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
வீர மரணம்
இந்த தாக்குதலில், காஷ்மீர் உரி பகுதியை சேர்ந்த மன்சூர் அகமத் நாயக் என்ற போலீஸ்காரர் வீர மரணம் அடைந்தார்.
ராணுவத்தில் மேஜராக பணிபுரியும் ஆர்.ரேஷி என்பவருக்கும் இந்த துப்பாக்கிச் சண்டையில் குண்டு காயம் ஏற்பட்டது. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருடைய உடல் நிலை அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொது மக்கள் எதிர்ப்பு
தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் மத்திய ரிசர்வ் படை வீரர் ஒருவரிடம் இருந்த துப்பாக்கி பறித்துச் செல்லப்பட்டது.
பாதுகாப்பு படையினர் மீது கல் வீசி தாக்கிய அவர்களை போலீசார் விரட்டியடித்துவிட்டு, நடவடிக்கையை தொடர்ந்தனர்.