
இமாசல பிரதேசத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பஸ்கள் 2400 அடி பள்ளத்தில் விழுந்தன. இதில் 830பயணிகள் உயிர் இழந்தனர்.
இமாசல பிரதேச மாநிலத்தில் மண்டி- பதான்கோட் பாதையில் நள்ளிரவு 1.30 மணியளவில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அம்மாநிலத்தில் கன மழை பெய்துவருவதை அடுத்து இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த திடீர் நிலச்சரிவில் அந்த பாதையில் சென்றுகொண்டிருந்த 2 பஸ்கள் சிக்கின. இந்த சம்பவம் நிகழ்ந்தபோது, தேனீர் அருந்துவதற்காக கோத்ருபி பகுதியில் அந்த பஸ்களை கடை அருகே நிறுத்தியிருந்தனர்.
நிலச்சரிவின் காரணமாக அந்த சாலையின் ஒரு பகுதியே பெயர்ந்து அடித்துச்செல்லபட்டது. இதனால் அதில் சிக்கிய 2 பஸ்களும் 2400 அடி பள்ளத்தில் விழுந்தன.
இந்த கோர சம்பவத்தில் இரு பஸ்களிலும் இருந்த 30க்கு மேற்பட்ட பயணிகள் உடல் நசுங்கி பலியானார்கள். ஒரு பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் உடல்கள் மீட்கப்பட்டன. பலியான பலர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நிலச்சரிவில் சிக்கிய 5 பேர் மீட்கப்பட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் மாநிலம் முழுவதும் 50க்கு மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டவர்களை தேடி மீட்கும் பணியில் ராணுவத்தினரும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளது வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.