
இத்தாலியிலிருந்து அமிருதசரஸ் வந்த ஏர் இந்தியா விமானத்தில் 125 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகத்தில் பரவி வருகிறது. ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகள் விமான போக்குவரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இந்தியாவிலும், விமான பயணிகளுக்கு தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இத்தாலியில் இருந்து இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளுக்கு, விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 125 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது சுகாதாரத்துறையினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுக்கு தொற்றை பரப்பாமல் இருப்பதை உறுதிசெய்ய ஒன்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிசா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மிசோரம், மேகாலயா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ஆர்த்தி அஹுஜா, அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கை மற்றும் நேர்மறை விகிதங்களுக்கு மத்தியில் கோவிட்-19 சோதனையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். போதுமான கொரோனா பரிசோதனை இல்லாத நிலையில், சமூகத்தில் பரவும் நோய்த்தொற்றின் உண்மையான அளவைக் கண்டறிவது சாத்தியமாக இருக்காது என்றும் அஹுஜா ஜனவரி 5 ஆம் தேதியிட்ட தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்தியாவில் நேற்று 90,928 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 325 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து மொத்த இறப்பு எண்னிக்கை 4,82,876 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 2,85,401 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 71,397 அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,206 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்த மீட்பு எண்ணிக்கை 3,43,41,009 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நேற்று புதிதாக 495 பேர் ஓமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டில் மொத்த ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 2,630 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.