ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சலுக்கு 11 வயது சிறுவன் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 5ஆக அதிகரிப்பு!!

By Narendran SFirst Published Jul 18, 2022, 8:02 PM IST
Highlights

திருவனந்தபுரம் கிளிமானூரைச் சேர்ந்த 11 வயது சிறுவன், லார்வா பூச்சிகளால் ஏற்படும் ஸ்க்ரப் டைபஸ் என்ற காய்ச்சலால் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.  

திருவனந்தபுரம் கிளிமானூரைச் சேர்ந்த 11 வயது சிறுவன், லார்வா பூச்சிகளால் ஏற்படும் ஸ்க்ரப் டைபஸ் என்ற காய்ச்சலால் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. திருவனந்தபுரம் கிளிமானூரைச் சேர்ந்த ரதீஷ் மற்றும் சுபா தம்பதியரின் மகன் சித்தார்த். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லார்வா பூச்சிகளால் ஏற்படும் ஸ்க்ரப் டைபஸ் என்ற காய்ச்சல் காரணமாக பொது சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், நான்கு நாட்களுக்கு முன்பு அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த ஆண்டு இதுவரை ஆறு ஸ்க்ரப் டைபஸ் இறப்புகள் பதிவாகியுள்ளன. திருவனந்தபுரத்தில் 5 பேரும், மலப்புரத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: கேரளாவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை... மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி!!

இந்த ஆண்டு 250 பேர் ஸ்க்ரப் டைபஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த தசாப்தத்தில், லார்வா மைட் அல்லது சிகர்ஸ் கடித்ததால் ஏற்படும் ஸ்க்ரப் டைபஸுக்கு 4,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். மேலும் அந்த காலகட்டத்தில் 68 பேர் உயிரிழந்தனர். சிகர்களால் சுமந்து செல்லப்படும் ஓரியன்டியா சுட்சுகாமுஷி என்ற பாக்டீரியாவால் இந்த நோய் ஏற்படுகிறது. விலங்குகளில் இருந்து வரும் சிகர்கள் புல்லில் சிக்கிக் கொள்கின்றன. இந்த பாக்டீரியாக்கள் சிகர் கடிப்பதன் மூலம் மனித உடலுக்குள் நுழைகின்றன. இதை அடுத்து மணலில் விளையாடும் போதும், பணிபுரியும் போதும் உடலை மூடிக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஸ்க்ரப் டைபஸின் பொதுவான அறிகுறிகளில் காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும் சில நேரங்களில் சொறி ஆகியவை அடங்கும். சிலருக்கு மூளை மற்றும் இதயம் பாதிக்கப்படும் போது இந்நோய் சிக்கலாகிவிடும்.

இதையும் படிங்க: உள்ளாடையை கழற்றியே ஆகணும்.. நீட் தேர்வில் சர்ச்சை - மாணவி பரபரப்பு புகார் !

ஸ்க்ரப் டைபஸ் டைபாய்டு, எலிக்காய்ச்சல் மற்றும் டெங்கு போன்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளது. நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மூலம் நோய்க்கு சிகிச்சையளிக்க முடியும். ஸ்க்ரப் டைபஸ் ஒரு சிகிச்சை அளிக்கக்கூடிய நோய். ஆனால் சிகிச்சை அளிக்க முடியாத சந்தர்ப்பங்களில் இறப்பு 40% வரை உள்ளது. அனைத்து காய்ச்சலிலும் ஸ்க்ரப் டைபஸ் என்று சந்தேகிக்க வேண்டிய அவசியமில்லை. உடலில் எஸ்கார் (ஒரு சிரங்கு) இருப்பது நோய்க்கான உறுதியான அறிகுறியாகும். ஆனால் எஸ்கார் 40-80% நோயாளிகளில் மட்டுமே காணப்படுகிறது. சிகிச்சை அளிக்கும் மருத்துவர் நோயை உறுதி செய்வதற்காக ஆய்வகப் பரிசோதனைகளுக்கு முன்பே டாக்ஸிசைக்ளின் கொடுக்க ஆரம்பிக்கலாம். ஆண்டிபயாடிக் முதல் 48 மணி நேரத்திலேயே நிவாரணம் தரும், மேலும் இது நோயை உறுதிப்படுத்தும் முறையாகவும் பயன்படுத்தப்படுகிறது என்று திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தொற்றுநோயியல் நிபுணரும் இணை பேராசிரியருமான மருத்துவருமான அல்தாஃப் ஏ தெரிவித்துள்ளார்.

click me!