Omicron : 100-ஐ கடந்த ஒமைக்ரான் பாதிப்பு… உச்சக்கட்ட பரபரப்பில் இந்தியா… பயணங்களை தவிர்க்க அறிவுறுத்தல்!!

By Narendran SFirst Published Dec 17, 2021, 5:51 PM IST
Highlights

நாடு முழுவதும் உள்ள  11 மாநிலங்களில் 101 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் உள்ள  11 மாநிலங்களில் 101 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  டெல்டாவை வைரஸை விட 5 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது எனக் கூறப்படும் ஒமைக்ரான் பரவல் விகிதம் அதி வேகமாக இருந்து வருகிறது. முதல் தொற்று கண்டறியப்பட்டு 10 நாட்களே ஆகியிருக்கும் நிலையில் அதற்குள்ளாக 11 மாநிலங்களில் 101 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்பிலிருந்த முதல்நிலை  இரண்டாம் நிலை தொடர்பாளர்களுக்கு பரிசோதனை செய்தால் தொற்று எண்ணிக்கை  அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால், கடந்த 20 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்புகள் 10 ஆயிரத்திற்கும் குறைவாகவே பதிவாகி வருவதாக தெரிவித்தார்.

கடந்த ஒரு வாரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விகிதம் 0.65 சதவீதமாக உள்ளது என்றும்,  இந்தியாவில் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் மொத்த  எண்ணிக்கையில் கேரளாவில் மட்டும் 40.31 % பேர் உள்ளனர் என்றும் தெரிவித்தார். இந்தியா, உலகிலேயே மிக அதிக விகிதத்தில் கோவிட் தடுப்பூசி செலுத்திய நாடாக இருக்கிறது என்றார். இந்தியா முழுவதும்   87.6 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியிருப்பதாகவும்,   3 லட்சத்திற்கு மேல் தடுப்பூசி மையம்  அமைக்கப்பட்டுள்ளது என்றும் லாவ் அகர்வால் தெரிவித்தார்.  

டெல்டா வகை வைரஸ்களை விட வேகமாக பரவும் என உலக சுகதார அமைப்பு எச்சரித்துள்ள ஒமைக்ரான்,  உலகளவில் 91 நாடுகளுக்கு பரவியுள்ளதாக அவர் கூறினார். மேலும், இந்தியாவில் 11 மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் 101 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதில் மஹாராஷ்டிராவில் 32 பேர், டில்லியில் 22 பேர், ராஜஸ்தானில் 17 பேர், கர்நாடகாவில் 8 பேர், தெலுங்கானாவில் 8 பேர், குஜராத்தில் 5 பேர், கேரளாவில் 5 பேர், ஆந்திரா - 1, சண்டிகர் - 1, தமிழகம் - 1, மேற்குவங்கம் – 1 என நாடு முழுவதும் இதுவரை 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மக்கள் அத்தியாவசிய தேவையில்லாத  பயணங்களை தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

click me!