Fake marriage : அரசின் திருமண நிதி உதவியை பெற இப்படியா நடப்பாங்க.? உ.பி.யில் சகோதரியை திருமணம் செய்த சகோதரன்!

By Asianet TamilFirst Published Dec 17, 2021, 9:12 AM IST
Highlights

இத்திட்டத்தின் கீழ் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிக்கு ரூ. 35 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. ரூ. 20 ஆயிரம் ரூபாயை நேரடியாக மணப்பெண்ணின் வங்கிக்கணக்கில் அரசு செலுத்திவிடும்.

உத்தரப்பிரதேசத்தில் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் பணத்தைப் பெற உடன் பிறந்த சகோதரியை சகோதரன் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் சமூக நலத்துறை சார்பில் ஏழை, எளியவர்கள் திருமணம் செய்துகொள்ள அரசு சார்பில் நிதி உதவி வழங்கும் திட்டம் உள்ளது.  இத்திட்டத்தின் கீழ் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிக்கு ரூ. 35 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. ரூ. 20 ஆயிரம் ரூபாயை நேரடியாக மணப்பெண்ணின் வங்கிக்கணக்கில் அரசு செலுத்திவிடும். எஞ்சிய தொகைக்கு பரிசு பொருளாக வழங்கப்படும். இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற பல முறைகேடுகள் நடைபெறுவதாகத் தொடர்ந்து பல புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஒரு புதிய புகார் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் அரசு வழங்கும் ரூ. 35 ஆயிரம் பணத்தை பெற தனது சகோதரியையே சகோதரன் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு நடந்திருக்கிறது. பெரோசாபாத் மாவட்டம் டுயுன்லா என்ற பகுதியில் அரசின் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் டிசம்பர் 11 அன்று 51 ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெற்றது. இதில் திருமணம் செய்துகொண்ட ஜோடிகள் அளித்த ஆவணங்கள் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த ஆவணங்களை கிராம மக்களின் உதவியுடன் சரிபார்க்கும் பணியை அரசு அதிகாரிகள் செய்தனர்.

அப்போது, ஒரு ஜோடியின் புகைப்படத்தை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் புகைப்படத்தில் திருமணக்கோலத்தில் இருந்தது சகோதரன் - சகோதரி. உடன் பிறந்த சகோதரியுடன் சகோதரன் மாலை கழுத்துமாக தாலி கட்டியதைக் கண்டு அதிர்ந்த கிராம மக்கள், அதை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதுதொடர்பாக மேலும் விசாரணை முடுக்கிவிட, திருமணம் செய்துகொண்ட இருவரும் ஒரே வீட்டில் வசிக்கும் சகோதன்ர - சகோதரி என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும் அரசின் நிதி உதவியைப் பெற இருவரும் திருமணம் செய்துகொண்டதும் தெரிய வந்தது.

இதனையடுத்து, அரசு திட்டத்தின் நிதி உதவியை பெற சொந்த சகோதரியையே திருமணம் செய்த சகோதரன்  மீது போலீசாரில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரை தொடர்ந்து சகோதரன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், திருமணத்தின் போது அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப்பொருட்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டன. உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இத்திருமணம். இந்த மோசடியில் ஈடுபட்ட சகோதரன், சகோதரியின் பெயர்களை எதிர்காலம் கருதி அரசு தரப்பு வெளியிடவில்லை. 

click me!