நாடு முழுவதும் ஒரு லட்சம் மதரசாக்களில் கழிவறை - மத்திய அரசு திட்டம்

First Published Mar 18, 2017, 4:52 PM IST
Highlights
1 lakh toilets in mosques


நாடு முழுவதும் ஒரு லட்சம் மதரசாக்களில் கழிவறை வசதி ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

3 கட்ட திட்டம்

மத்திய சிறுபான்மைத்துறை இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி மவுலானா அபுல் கலாம் ஆசாத் அறக்கட்டளை நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- 3 கட்ட திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

முதலாவதாக ஒரு லட்சம் மதரசாக்களில் கழிவறை வசதி ஏற்படுத்தி தரப்படும். மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அடுத்த நிதியாண்டுக்குள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நவீன கல்வி

இதேபோன்று மதிய உணவு மற்றும் திறமையான ஆசிரியர்கள் நியமிப்பது ஆகியவற்றையும் நிறைவேற்றித் தர திட்டமிட்டுள்ளது. இதற்கான மதரசாக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அதேநேரத்தில் அங்கு அளிக்கப்படும் கல்வியையும் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை புகுத்துவதன் மூலமாக நவீனப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இது சம்பந்தமாக, ஆசாத் அறக்கட்டளையின் நிர்வாகிகள் சுற்றுப் பயணம் மேற்கொள்வார்கள்.

கூடுதல் மாணவிகள்

பேகம் ஹஸ்ரத் திட்டத்தின் கீழ் தற்போது 20 ஆயிரம் மாணவிகள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கையை 45 ஆயிரமாக இந்த நிதியாண்டுக்குள் உயர்த்த திட்டமிட்டுள்ளோம். அடுத்த நிதியாண்டில் 5 லட்சம் மாணவிகள் பலன் பெறுவதற்கு நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

click me!