
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிக்கும் பிரணாப் முகர்ஜி… பன்முகத் தன்மையே இந்தியாவின் மிகப்பெரிய வலிமை என உரை…
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதையடுத்து வெகுண்டெழுந்த மாணவர் சமுதாயம் நடத்திய அறவழிப் போராட்டம் உலகையே வியக்க வைத்தது.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சிமிகு இப்போராட்டத்திற்கு மத்திய,மாநில அரசுகள் பனிந்தன. இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது.இந்த சட்டம் தமிழக சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தடையின்றி ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா வண்டி போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் இந்த போராட்டத்திற்கு அரசியல்வாதிகள்,திரைத்துறையினர்,பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் ஆதரவு அளித்ததோடு மாணவர்கள் பெற்ற இந்த வரலாறு காணாத வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
இந்நிலையில் குடியரசு தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றினர்.
அதில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து பேசியது, மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.அவர் தனது உரையின் போது கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்ய அவர்களுக்கு சிறந்த வசதிகளையும், வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் என குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய முகர்ஜி பன்முகத் தன்மையே நமது நாட்டின் மிகப்பெரிய வலிமை என தெரிவித்தார்.
மேலும் நாட்டில் உள்ள அனைவருக்கும் தனித்தனி அடையாளங்கள் இருப்பதை அங்கீகரிக்க வேண்டும் என்று ஜல்லிகட்டு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு குடியரசுத் தலைவரின் இந்த பேச்சு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.