
தூத்துக்குடி ஒட்டப்பிடாரத்தில் உலகநாத பிள்ளை-பரமாயி அம்மாளுக்கு 1872 செப்டம்பர் 5 மூத்த மகனாக பிறந்தவர் வ.உ.சி. சிறுவயது முதலே செல்வசெழிப்புடன் வளர்ந்தவர். இளம் வயதிலேயே தமிழ், ஆங்கிலத்தில் புலமை பெற்று தன் தந்தையின் வழியில் வழக்கறிஞரானார். நாட்டில் சுதந்திர தாகம் வேகமெடுத்த காலத்தில் பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் கவரப்பட்டு நாட்டின் விடுதலைப்போரில் களமிறங்கினார் வ.உ.சி.
அதன் ஒரு பகுதியாக1905-ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு, சுதந்திர போராட்டத்தில் வ.உ.சி. குதித்தார். வ.உ.சி.யின் சுதந்திர விழிப்புணர்வு உரைகள் தீயாய் பிரிட்டிஷாரை சுட்டன. பொதுமக்களுக்கு உணர்ச்சிமிகு உரைகளையாற்றி அவர்கள் மத்தியில் சுதந்திரத் தீயை பற்ற வைத்தார் வ.உ.சி. இதனால், பிரிட்டிஷாரின் கோபம் அவர் மீது திரும்பியது.
உலகில் எந்த ஒரு நாடும் இனமும் அடிமைப்படுகிறது என்றால், அதற்கு முக்கிய காரணமே வணிகம்தான். அப்படி வணிகம் செய்ய வந்த பிரிட்டிஷார், நம்மை அடிமைப்படுத்தி ஆண்டனர். இந்தியாவை ஆங்கிலேயர் சுரண்டியும், வர்த்தகத்தில் தங்கள் ஆதிக்கம் மூலம் இந்தியாவை வறுமையில் தள்ளியதையும் வ.உ.சி உணர்ந்தார். அவர்களுடைய வர்த்தகத்துக்குக் கப்பல் கைகொடுப்பதால், அதேபோல கப்பல் ஒன்றை வாங்க வேண்டும் என்று விரும்பினார் வ.உ.சி. இதற்காக ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி எனும் நிறுவனத்திடம் இருந்து கப்பல்களை வாடகைக்கு எடுத்தார்.
அதற்கு பிரிட்டிஷ் அரசு முட்டுக்கட்டை போட்டது. இதனால் கொதித்த வ.உ.சி. சொந்தமாக கப்பல் வாங்க முடிவு செய்தார். இதற்காக தன்னுடைய சொத்துக்கள் அத்தனையையும் விற்று, இந்தியா முழுவதும் 40 ஆயிரம் பங்குதாரர்களை உருவாக்கி சுமார் அன்று 10 லட்சம் மதிப்பில் “சுதேசி ஸ்டீம் நேவிகேஷன்” என்னும் நிறுவனத்தை உருவாக்கினார். வ.உ.சி.யின் சுதேசிக் கப்பலை அன்று நாடே கொண்டாடியது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் இது திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதனால் பிரிட்டிஷார் பதறினர். சுதேசி கப்பலை அழித்தொழிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுதேசி கப்பலுக்குப் போட்டியாக இலவசப் பயணத்தை அறிவித்து மக்களை தங்கள் பக்கம் திருப்ப முயன்றனர். பிரிட்டிஷாரின் இலவச பயணத்துக்குப் போட்டியை சமாளிக்க முடியாமல் சுதேசிக் கப்பல் தள்ளாடியது. இருந்தாலும் வ.உ.சி. மீது கோபம் தணியாத பிரிட்டிஷ் அரசாங்கம், போராட்டங்களில் ஈடுபட்டது, மக்களைத் தூண்டிவிட்டது என காரணங்களை அடுக்கி 12.03.1908 அன்று கைது செய்து சிறையில் அடைத்தது. வ.உ.சி. கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன் மக்கள் கொந்தளித்தனர்.
வ.உ.சி. மீது தேச துரோக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனையை நீதிமன்றம் வழங்கியது. செல்வ செழிப்போடு வாழ்ந்த வ.உ.சி. கோயமுத்தூர் சிறைக்கொட்டடியில் தள்ளப்பட்டார். அங்குதான் அவர் வாழ்வின் பெரும் துன்பங்களை சந்தித்தார். அங்கு அவருருக்கு உடலை உருக்கும் அளவுக்கு கொடுமையான வேலைகளை பிரிட்டிஷார் வழங்கினர். கைகளின் காப்புகள் ஏற்பட்டு புண்ணாகும் வரை கல் உடைத்தார், உச்சி வெயிலில் மாடுகளுக்குப் பதில் வெறுங்காலுடன் செக்கு இழுக்க வைக்கப்பட்டார்.
உடலை பாதிக்கும் சணல் நூற்பு என கடுமையான வேலைகளால் துன்புறுத்தப்பட்டார். அவருக்கு மோசமான உணவை வழங்கியதாலும் வ.உ.சி.யின் உடல்நிலை நலிவுற்றது. வழக்கு மேல் முறையீட்டினால் தண்டனை குறைக்கப்பட்டது. இதனையடுத்து 1912 ஆம் ஆண்டு விடுதலையானார் வ.உ.சி. பிரிட்டிஷாரை எதிர்க்க தன் செல்வங்களை விற்று கப்பல் வாங்கிய அந்தத் தமிழனை வரவேறகக்கூட ஒருவரும் அன்று வரவில்லை. சிறையிலிருந்து வந்தவரிடம் புழங்க காசு பணமும் இல்லை. வழக்கின் காரணமாக வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது, இதனால் எதுவும் செய்ய முடியாமல் தவித்தார்.
வறுமை அவரை சூழந்தது. லட்சங்களில் வாழ்ந்த வ.உ.சி. வேறு வழியில்லாமல் பிழைப்புத் தேடி குடும்பத்துடன் சென்னைக்கு வந்தார். வீதி வீதியாக மண்ணெண்ணெய் வியாபாரம் செய்தார். அரிசி வியாபாரம் செய்தார். ஓர் ஆங்கிலேயே அதிகாரி வழக்கறிஞர் உரிமத்தைப் பெற்று தந்தார். வழக்கறிஞர் பணியைச் செய்தபோதும் அவரால் பழையபடி சோபிக்க முடியவில்லை. வறுமை சூழந்தாலும், சுதந்திர இந்தியாவை காணும் ஆவலில் காலங்கள் கழிந்தன.
உடல்நலன் மேலும் பாதிக்கப்பட்டது. படுத்த படுக்கையானார். மகாகவி பாரதியின் "என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? " என்ற பாடலைக் கேட்டப்படியே தன்னுடைய இறுதி சுவாசத்தை நிறுத்திக்கொண்டார். நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தன் சொத்துக்களை இழந்து, தன் குடும்பத்தையும் வறுமையில் தள்ளிய வ.உ.சி., உதவியின்றி 1936 நவம்பர் 18 ஆம் தேதி காலமானார்.