India@75 Freedom Fighters: இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகம் தந்த திருப்புமுனைகள்..!

By Raghupati R  |  First Published Mar 28, 2022, 12:56 PM IST

இந்திய விடுதலை போராட்டங்கள் என்றாலே வட இந்திய போராட்டங்கள் பற்றிதான் அதிகம் பேசப்படுகிறது. பள்ளி பாடப்புத்தகங்களிலும் வட இந்திய போராட்டங்களே அதிகமாக இடம்பெற்றுள்ளன. தென்னிந்திய போராட்டங்கள், குறிப்பாக தமிழ்நாட்டின் பங்களிப்பு மிகக்குறைவாகவே இடம்பெற்றுள்ளது. 


அந்தளவிற்கு, விடுதலை போராட்டங்களில் தமிழ்நாட்டின் செயல்பாடு பெரிதாக பேசப்படுவதில்லை. இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மற்றும் விடுதலை போராட்டத்தில் தமிழ்நாடு ஏற்படுத்திய திருப்புமுனைகள் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன்:

Latest Videos

1857க்கு பிறகு இந்திய விடுதலை போராட்டம் சூடுபிடித்தது. அதுவரை ஆங்கிலேயர்களை எதிர்க்க மட்டுமே செய்த இந்தியர்கள், 1857ம் ஆண்டுக்கு பின்னர் தான் சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்தனர். 19ம் நூற்றாண்டில் தான் இந்திய சுதந்திர போராட்டம் தீவிரமடைந்தது. ஆனால் 18ம் நூற்றாண்டிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையக்காரர்களை திரட்டி போராடியவர்கள் பூலித்தேவனும், வீரபாண்டிய கட்டபொம்மனும்.

ஆற்காடு நவாப் கிழக்கிந்திய கம்பெனியுடன் சேர்ந்து மதுரையிலும் நெல்லையிலும் ஆட்சியை விரிவுபடுத்த முயன்றபோது, மேற்கு பாளையக்காரர்களை திரட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார் பூலித்தேவன். அவரது உயிர்த்தியாகத்துக்கு பிறகு, கிழக்கு பாளையக்காரர்களை ஒன்றுதிரட்டி போராடிவர் தான் பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன். ஆங்கிலேயர்கள் கேட்ட வரியை செலுத்த மறுத்ததுடன், ஆங்கிலேயர்களுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டு உயிர்த்தியாகம் செய்தார்.

வேலூர் கலகம்:

1857ல் மீரட்டில் தொடங்கிய சிப்பாய் கலகம் தான் சுதந்திர போராட்டத்தின் முதல் போர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் முதல் விடுதலை போர் என்பது 1806ல் நடந்த வேலூர் கலகம் தான். வேலூர் கோட்டையில் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக கலகம் வெடித்தது. வேலூர் கோட்டையில் திப்பு சுல்தானின் குடும்பத்தினர் சிறை வைக்கப்பட்டது, படை வீரர்களுக்கு விதிக்கப்பட்ட ஆடை கட்டுப்பாடுகள், மதச்சின்னங்களை அணிந்துகொள்வதற்கான தடை ஆகியவை தமிழர்களை கொதித்தெழ வைத்தது. 

ஜூலை 10ம் தேதி இரவு இந்திய வீரர்களின் புரட்சி வெடித்தது. வேலூர் கோட்டையில் 200க்கும் அதிகமான ஆங்கிலேய அதிகாரிகளை இந்திய வீரர்கள் கொன்று குவித்தனர். வேலூர் கோட்டையை புரட்சியாளர்கள் கைப்பற்றினர். ஆனால் இந்த கலகம் பற்றி அறிந்து, மற்ற ஊர்களிலிருந்து வந்து வேலூரில் குவிந்த ஆங்கிலேயப்படை புரட்சியாளர்களை கொன்று வேலூர் கோட்டையை மீண்டும் கைப்பற்றியது. ஆனால் வேலூர் கோட்டையில் ஆங்கிலேய அதிகாரிகள் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது ஆங்கிலேயர்களுக்கு கலக்கமடைய செய்தது.

வேதாரண்யம் உப்புச்சத்தியாகிரகம்:

ஆங்கிலேய அரசு இந்தியர்களுக்கு எதிராக விதித்த உப்பு வரியை எதிர்த்து குஜராத் மாநிலம் தண்டியை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டார் மகாத்மா காந்தி. காந்தியின் உப்புச்சத்தியாகிரக போராட்டத்தை தமிழ்நாட்டில் தலைமை ஏற்று வழிநடத்தினார் ராஜாஜி. சர்தார் வேதரத்தினம் பிள்ளை இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்தார். வேதாரண்யம் உப்புச்சத்தியாகிரகம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 6 மாதங்கள் சிரையில் அடைக்கப்பட்டனர். காவிரி ஆற்றங்கரையோர மக்களிடம் விடுதலை உணர்வை விதைத்தது வேதாரண்யம் உப்புச்சத்தியாகிரகம்.

click me!