குதிராம் போஸ் அவரது குழந்தை பருவத்தில் இருக்கும் போதே பெற்றோர் இருவரும் உயிரிழந்து விட்டனர். பெற்றோர் மறைவுக்கு பின் குதிராம் போஸ் அவரது சகோதரி அரவணைப்பில் வளர்ந்தார்.
முகம் முழுக்க சிரிப்புடன் மரண வாயிலுக்கு சென்ற பல வரலாற்று கதாநாயகர்களை நாம் அறிவோம். இது போன்ற நாயகர்களில் இளம் போராளி தான் 18 வயதான குதிராம் போஸ். வங்காள பிரிவினைக்கு பின் எழுச்சிப் பெற்ற பல்வேறு புரட்சியாளர்களில் இளம் வயதில் புரட்சியாளராக அறியப்படும் பெயர் தான் இது.
திரிலோகநாத் மற்றும் லட்சுமிபிரியதேவி தம்பதிக்கு ஒரே மகன் குதிராம் போஸ். இவருக்கு முன் திரிலோகநாத் மற்றும் லட்சுமிபிரியதேவி தம்பதிக்கு இரண்டு மகன்கள் பிறந்து உயிரிழந்து விட்டனர். இதைத் தொடர்ந்து இந்த தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. அதன் பின் பிறந்தவர் தான் குதிராம் போஸ். குதிராம் போஸ் உயிரை காப்பாற்ற அவரின் தாயார் லட்சுமிபிரியதேவி சிறப்பு பூஜைகளை நடத்தினார்.
எனினும், குதிராம் போஸ் அவரது குழந்தை பருவத்தில் இருக்கும் போதே பெற்றோர் இருவரும் உயிரிழந்து விட்டனர். பெற்றோர் மறைவுக்கு பின் குதிராம் போஸ் அவரது சகோதரி அரவணைப்பில் வளர்ந்தார். சிறு வயது முதலே வங்கத்தில் சிறந்து விளங்கிய புரட்சி அமைப்பின் செயல்களால் ஈர்க்கப்பட்டார். அருபிந்தோ கோஷ் மற்றும் சகோதரி நிவேதிதா ஆகியோரின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டார் குதிராம் போஸ். இதை அடுத்து பிரிடிஷ் அரசை விரட்டி அடிக்க தானும் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் குதிராம் போஸ் அனுஷீலன் சமிதி எனும் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.
புரட்சியாளர்கள் திட்டம்:
கொல்கத்தா மாஜிஸ்திரேட் டௌக்லஸ் கிங்ஸ்போர்டு இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எதிரானவர் ஆவார். தேசிய இயக்கங்களில் பங்கு பெறும் சிறுவர்களுக்கும் மிக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. இதன் காரணமாக டௌக்லஸ் கிங்ஸ்போர்டை கொன்று குவிக்க புரட்சியாளர்கள் திட்டமிட்டனர். இது பற்றி தகவல் கிடைத்ததை அடுத்து கிங்ஸ்போர்டு முசாபர்பூருக்கு மாற்றப்பட்டார். எனினும், குதிராம் போஸ் மற்றும் அவரின் நண்பர் பிரஃபுல்லா சக்கி கிங்ஸ்போர்டு தப்பிக்கக் கூடாது என்று முடிவு செய்தனர்.
அதன் படி ஏப்ரல் 30, 1908 அன்று குதிராம் போஸ் மற்றும் சக்கி முசாபர்பூரில் உள்ள ஐரோப்பிய கிளப் ஒன்றின் வாயிலில் மறைந்து படி தாக்குதலுக்கு தயார் நிலையில் காத்துக் கொண்டு இருந்தனர். கிங்ஸ்போர்டு மற்றும் அவரின் மனைவி அன்று மாலை பொழுதை அவர்களின் நண்பர்களோடு கழித்தனர். இரவு 8 மணி அளவில் இரண்டு வண்டிகள் கதவை கடக்க முயன்றது. அப்போது குதிராம் போஸ் மற்றும் அவரின் நண்பர் பிரஃபுல்லா சக்கி வாகனத்தின் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்கினர். எனினும், இவர்கள் வீசிய வெடிகுண்டு கிங்ஸ்போர்டு சென்ற வாகனத்திற்கு பதில் அவரின் கிங்ஸ்போர்டு நண்பரான பிரிடிஷ் பெண் மற்றும் அவரது மகள் சென்ற வாகனத்தை தாக்கி அழித்தது. இதில் இருவர் கொல்லப்பட்டனர்.
அதிரடி தாக்குதல்:
குதிராம் போஸ் மற்றும் பிரஃபுல்லா சக்கி வெவ்வேறு திசைகளில் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். இரவில் 25 கிலோமீட்டர் நடந்தே சென்ற குதிராம் போஸ் அதிகாலை வேளையில் வைனி ரெயில்வே நிலையத்தை அடைந்தார். அங்கு போலீசாரிடம் குதிராம் போஸ் சிக்கிக் கொண்டார். போலீஸ் தன்னை பிடிக்க முற்பட்ட போது பிரஃபுல்லா சக்கி தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் பாட்னா அருகே இருக்கும் மொகாமா ரெயில்வே நிலையத்தில் அரங்கேறியது.
குதிராம் போஸ்-க்கு விதிக்கப்பட்ட மரண தண்டன நாடு முழுக்க பெரும் கவனத்தை ஈர்த்தது. குதிராம் போஸ் வீரத்தை கண்டு மகாத்மா காந்தியும் மரியாதை செலுத்தினார். எனினும், அவரின் வன்முறை குணத்திற்கு மகாத்மா காந்தி கண்டனம் தெரிவித்தார். எனினும், குதிராம் போஸ் நடவடிக்கைக்கு திலக் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்தார். இளம் வயது என்ற போதிலும், இவருக்கான மரண தண்டனையில் எந்த வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. குதிராம் போஸ்-க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மரண தண்டனை:
தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், குதிராம் போஸ் சிரித்தார். கைதான நிலையில், முசாபர்புர் சிறைக்கு கொண்டு சென்ற போது, குதிராம் போஸ்-ஐ காண ஏராளமானோர் கூடி இருந்தனர். ஆகஸ்ட் 11, 1908 ஆம் ஆண்டு குதிராம் போஸ்-க்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இன்று சமஷ்திபூரில் உள்ள வைனி ரெயில் நிலையம், குதிராம் போஸ் புசா ஸ்டேஷன் என்றும், முசாபர்புர் சிறை குதிராம் போஸ் நினைவு சிறைச்சாலை என பெயர் மாற்றப்பட்டு இருக்கிறது.