
இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு சாதிரீதியான கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசு மறுத்துவருவதைக் கண்டித்து அனைத்து இந்திய பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகத்தினரின் ஊழியர்கள் கூட்டமைப்பு(பிஏஎம்சிஇஎப்) இன்று பாரத்பந்த்(25ம்தேதி) நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் சஹரான்பூர் மாவட்டத்தின் பகுஜன் முக்தி கட்சியின் தலைவர் நீரஜ் திமான் கூறுகையில் “ தனியார் துறைகளில் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு முறையை இன்னும் அமல்படுத்தவில்லை உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறத்தி இன்று பந்த் நடத்துகிறோம்” எனத்தெரிவித்தார்
அனைத்து இந்திய பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகத்தினரின் ஊழியர்கள் கூட்டமைப்பு நடத்தும் பாரத்பந்த்துக்கு ஆதரவாக பகுஜன் கிராந்தி மோர்ச்சா கட்சி, பகுஜன் முக்தி கட்சி, தேசிய பரிவர்த்தன் மோர்ச்சா, பாரத் முக்தி மோர்ச்சா, பாரதிய யுவ மோர்ச்சா உள்ளிட்டபல்வேறு அமைப்புகளும் ஆதரவு அளித்துள்ளன.
பிஎம்பி கட்சியின் மாநிலத் தலைவர் டி.பி.சிங் கூறுகையில் “ மக்கள் பாரத் பந்த்தை வெற்றிகரமாக்க வேண்டும் என்று கேட்கிறேன். பாரத் பந்த்தை ஆதரிக்கும் மக்கள் சமூக வலைதளத்தில் இதைத் தெரிவித்து, வர்த்தகம் மற்றும்பொதுப் போக்குவரத்தை புறக்கணிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்
அனைத்து இந்திய பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகத்தினரின் ஊழியர்கள் கூட்டமைப்பின் கோரிக்கைகள்:
1. இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சாதி ரீதியாக கணக்கெடுப்பு நடத்துதல்
2. தேர்தலில் மின்னணு வாக்கு எந்திரத்தை பயன்படுத்துவதை நிறுத்துதல்
3. தனியார் துறையில் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்தல்
4. என்ஆர்சி, குடியுரிமைத் திருத்தச்சட்டம், என்பிஆர் ஆகியவற்றை அமல்படுத்தக்கூடாது.
5. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை கட்டாயமாக்கக்கூடாது.
6. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க சட்டம் இயற்றுதல்
7. பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
8. மத்தியப்பிரதேசம், ஒடிசா பஞ்சாயத்து தேர்தலில் ஓபிசி இடஒதுக்கீட்டுக்கு தனியாகத் தேர்தல்
9. சுற்றுச்சூழலைக் காக்கிறோம் என்ற போர்வையில் பழங்குடியின மக்களை இடம் விட்டு இடம் மாற்றுவதை நிறுத்துதல்
10. கொரோனா லாக்டவுன் காலத்தில் தொழிலாளர் சட்டங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளித்தல்
இந்த பாரத் பந்த்துக்கு காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பெரிய கட்சிகள் ஏதும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்த பாரத் பந்த்தால் மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் வேண்டுமானால் இயல்புவாழ்க்கை பாதிக்கலாம். ஆனால், நாடுமுழுவதும் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. ரயில்போக்குவரத்து, பேருந்து போக்குவரத்து, பள்ளிகள் திறப்பு, கல்லூரிகள் திறப்பு, அரசு அலுவலகங்கள் போன்றவை வழக்கம் போல்இயங்குகின்றன