இந்திய சுதந்திர போராட்டம் என்றதுமே உடனடியாக நம் நினைவில் வருவதும், நாம் பேசுவதும், காந்தி, நேரு, சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரைப்பற்றித்தான். ஆனால் சாமானிய பெண்களும் விடுதலை போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டு போராடினர்.
ரகசியமான போராட்டங்களில் தகவல்களை ரகசியமாக கொண்டுசேர்க்கும் பணிகளை பெண்கள் செய்தனர். சுதேசி இயக்கத்தில் பெண்கள் தீவிரமாக கலந்துகொண்டனர். குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த வீரப்பெண்மணிகள் இந்திய சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினர். அப்படியான வீரத்தமிழ் பெண்களை பற்றி பார்ப்போம்.
அஞ்சலை அம்மாள்:
கடலூரை சேர்ந்த அஞ்சலை அம்மாள் சமூக சீர்திருத்தவாதி. 1921ம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டதன் மூலம், தனது விடுதலை போராட்ட பயணத்தை தொடங்கிய அஞ்சலை அம்மாள், அதைத்தொடர்ந்து உப்புச்சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய போராட்டங்களில் கலந்துகொண்டார். அஞ்சலை அம்மாளின் தைரியத்தை பார்த்த மகாத்மா காந்தி, அவரை தென்னிந்தியாவின் ஜான்சி ராணி என அழைத்தார்.
அஞ்சலை அம்மாளை சந்திப்பதற்காக காந்தி கடலூருக்கு வந்தார். ஆனால் அஞ்சலை அம்மாள் காந்தியை சந்திக்க ஆங்கிலேய அரசு தடை விதித்தது. ஆனாலும் புர்கா அணிந்து சென்று காந்தியை சந்தித்தார் அஞ்சலை அம்மாள். விடுதலை போராட்டங்களில் தான் கலந்துகொண்டது மட்டுமல்லாது, தனது 9 வயது மகளையும் கலந்துகொள்ள வைத்தார் அஞ்சலை அம்மாள். விடுதலை போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக நான்கரை ஆண்டுகள் சிறையில் இருந்த அஞ்சலை அம்மாள், கடைசி குழந்தையை சிறையிலேயே பெற்றெடுத்தார். அப்பேர்ப்பட்ட வீரமங்கை அஞ்சலை அம்மாள்.
ருக்மினி லக்ஷ்மிபதி:
இந்திய விடுதலை போராட்டத்தில் பங்குபெற்ற பெண் போராளிகளில் முக்கியமானவர் ருக்மினி லக்ஷ்மிபதி. முதல் பெண் கேபினட் மினிஸ்டர் இவர் தான். சுதந்திரத்திற்கு பிந்தைய தமிழ்நாட்டின் முதல் சுகாதாரத்துறை அமைச்சரும் இவரே. 1920களின் தொடக்கத்தில் அரசியலில் அடியெடுத்து வைத்த ருக்மினி, சுதேசி இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டார். 1923ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து, இளைஞரணியை வழிநடத்தினார்.
1930ம் ஆண்டு தமிழ்நாட்டில் ராஜாஜி தலைமையில் நடந்த உப்புச்சத்தியாகிரகத்திலும் கலந்துகொண்டார். ராஜாஜி கைதான பிறகு, உப்புச்சத்தியாகிரகத்திற்கு தலைமையேற்று வழிநடத்தியது ருக்மினி லக்ஷ்மிபதி தான். பெண்களின் நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டார். வேதாரண்யம் உப்புச்சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டதற்காக ஓராண்டு சிறைத்தண்டனையும் பெற்றார்.
தமிழப் பெண்களின் வீரமும், தியாகமும் நிறைந்த வரலாற்றின் ஒரு சில பக்கங்களே இவை. வேலுநாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை உட்பட தமிழகத்தை சேர்ந்த வீரமங்கைகளின் வரலாற்றுப் பதிவுகள் இன்னும்.. இன்னும்.. ஏராளம்..