
நம்மில் பெரும்பாலானோர் காலை எழுந்ததும் டீ அல்லது காபி குடிப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். சொல்லப்போனால் பலரும் இதற்கு அடிமையாகிவிட்டனர். எப்படியெனில், டீ காபிக்கு அடிமையானவர்கள் ஒருநாளைககு ஒருவேளையாவது டீ அல்லது காபி குடிக்கலனா தலைவலி வரும், கை கால் நடுங்கும் என்று சொல்லுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது தவிர எரிச்சலாகவும், சோர்வாகவும் உணர்வார்கள். உண்மையிலேயே டீ அல்லது காபி குடிக்காவிட்டால் தலைவலிக்கும். அப்படி தலை வலிப்பதற்கான காரணம் என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
டீ, காபி குடிக்கலைன்னா தலைவலி வருவது ஏன்?
டீ, காபியில் இருக்கும் காஃபின் மூளையில் அடினோசின் என்னும் வேதிப்பொருளின் உற்பத்தியை தடுக்கின்றது. அடினோசின் என்பது தூக்கத்தையும், சோர்வையும் ஏற்படுத்தும் ஒரு வேதிப்பொருள்.
நீங்கள் தினமும் டீ, காபி குடித்து வந்தால் உங்கள் மூளையானது இந்த மாற்றத்திற்கு பழகிவிடும். ஆனால் நீங்கள் திடீரென டீ, காபி குடிப்பதை நிறுத்தினால் அடினோசினாது திடீரென அதிகளவில் செயல்பட்டு மூளையில் இருக்கும் இரத்த நாளங்கள் விரிவடைய செய்யும். இதனால் விளைவாக தலைவலி, தலை சுற்றல் மனநிலை மாற்றங்கள் மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
அதுவும் அவ்வப்போது டீ காபி குடிப்பவர்களுக்கு இந்த பிரச்சனையானது 2-3 நாட்கள் வரை நீடிக்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக குடிப்பவர்களுக்கு இது ஒரு வாரம் வரை நீடிக்கும்.
டீ, காபி குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் :
- டீ, காபியானது உடலில் நீர்ச்சத்தை இழக்க செய்யும். உடலில் போதிய அளவு தண்ணீர் இல்லையென்றால் சிறுநீரக கற்கள் உருவாகும். அதுவும் குறைவாக தண்ணீர் குடிப்பவர்களுக்கு அல்லது உடலில் நீர்ச்சத்து குறைவாக உள்ளவர்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
- காலை எழுந்ததும் டீ காபி குடித்தால் அமிலத்தன்மை, வயிற்று எரிச்சல், இரைப்பை பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் நாள் முழுவதும் அசெளகரியமாக உணர்வீர்கள். இது இதயம் மற்றும் மன ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும்.
- டீ காபியில் இருக்கும் காஃபின் செரிமான செயல்முறையை சீர்குலைத்து விடும் .இதனால் வயிற்று உப்புசம், மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
- அதிகமாக டீ காபி குடித்தால் உயரத்தை அழுத்தம் ஏற்படும். இதனால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
- டீ காபியை தொடர்ந்து அளவுக்கு அதிகமாக குடித்து வந்தால் அதில் இருக்கும் சர்க்கரையானது இரத்த சர்க்கரை அளவை பாதிக்கும். இதனால் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளியின் அபாயத்தை அதிகரிக்கும்.
- அதிகப்படியான காஃபின் மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மையை ஏற்படுத்தும்.
டீ, காபி குடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?
- நீங்கள் டீ காபி குடிப்பதை நிறுத்த விரும்பினால் உடனே நிறுத்தாமல் படிப்படியாக செய்யவும். எப்படியெனில் ஒரு நாளைக்கு இரண்டு கப் என்று தொடங்கி, பிறகு ஒரு கப்பாக குறைத்து, பின்னர் படிப்படியாக நிறுத்தி விடுங்கள்.
- ஒரு நாளைக்கு போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள். ஏனெனில் உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் தலைவலி அதிகரிக்க செய்யும்.
- தினமும் இரவு நன்றாக தூங்குங்கள். ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- டீ, காபி குடிக்கவில்லை என்றால் ஏற்படும் தலைவலியானது தற்காலிகமானது. சில நாட்களிலேயே அது தானாகவே நின்றுவிடும்.
மேலே குறிப்பிட்ட விஷயங்கள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறோம்.