
முதலில் பாதிக்கப்பட்டவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். உடலில் துணி ஏதேனும் இருந்தால், அதைப் பிடித்து இழுக்காமல், கத்தரியால் கவனமாக வெட்டி, முழுமையாக அப்புறப்படுத்திவிட வேண்டும். நகைகள் இருந்தாலும் அப்புறப்படுத்திவிட வேண்டும்.
தீக்காயம் பட்ட இடத்தில், குழாய்த் தண்ணீர் படும்படி 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கலாம். எந்தக் களிம்பும், ஆயின்மென்ட்டும் தடவக் கூடாது.
கம்பளி, ஜமக்காளம் போன்ற தடிமனான துணிகளைப் போர்த்தி தரையில் உருளச் செய்யும்போது, அந்த வெப்பத்தில் திசுக்கள் வெந்துவிட வாய்ப்புள்ளது. ஒருவர் ஆடையில் தீப்பற்றிவிட்டால், உடனடியாகத் தண்ணீரை அவர் மேல் ஊற்றி, தீப் பரவாமல் அணைக்கலாம். தண்ணீர் ஊற்ற வழி இல்லை என்னும்போது, கம்பளி போன்றவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால், கம்பளியை நீண்ட நேரம் உடலில்வைத்திருக்கக் கூடாது.
தலை மற்றும் கழுத்தில் தீக்காயம் இருப்பின், வாய் வழியே குடிக்கவோ, சாப்பிடவோ எதையும் கொடுக்கக் கூடாது.
கொப்புளங்கள் தோன்றினால், அதை உடைத்துவிடக் கூடாது. காயத்தைக் கையால் தொடவே கூடாது. மிகப் பத்திரமாகத் தூக்கிக் கொண்டு, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
தீக்காயம் அடைந்தவரைக் காப்பாற்றச் சென்றவர்களே தீக்காயம் அடைந்ததாகப் பலமுறை படித்திருப்போம். எனவே, தீ விபத்தில் காப்பாற்றச் செல்பவர், தன்னுடைய முன்புறத்தில் கம்பளியைப் பாதுகாப்பாகக் கட்டிக் கொண்டு பாதிக்கப்பட்டவரை அணுகும்போது, தீக்காயம் ஏற்படாமல் பாகாப்பாக இருக்கலாம்.
ரசாயனம் அல்லது ஆசிட் போன்றவற்றால் காயம் ஏற்பட்டாலும், தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு அந்த இடத்தை ஓடும் தண்ணீரால் கழுவ வேண்டும்.