
வல்லாரை
வல்லாரை நினைவாற்றலை பெருக்கும், மூளை நரம்புகளை வலுப்படுத்தும்.
பதற்றத்தை குறைத்து, மன அமைதியை ஏற்படுத்தும் தன்மையுடையதால் ‘சரஸ்வதி’ என தெய்வீகமாக இதனை அழைத்தனர் நம் முன்னோர் "வல்லாரையிலை மருவுகற்ப மாயக் கொள்ளவெல்லா பிணிகளுமில்லாமையா மெய்யினில்" என்றனர்.
வல்லாரை ஒரு காயகற்ப மூலிகை. இதை மருந்தாக பயன்படுத்தும் பொழுது எல்லா பிணிகளும் உடம்பை விட்டு அகலும் என சித்த மருத்துவ பாடலில் சொல்லப்பட்டுருக்கிறது.
வல்லாரை, தோலுக்கு நல்ல பொலிவை ஏற்படுத்துகின்றது. வயதாவதால் தோலில் ஏற்படும் சுருக்கம்,கண்களுக்கு அடியில், மற்றும் முகத்தில் ஏற்படும் மெல்லிய கோடுகளை நீக்க வல்லது.
காயம்பட்ட தழும்புகள், தீப்புண்களால் ஏற்படும் ‘கீலாய்டு’ என்ற தழும்புகள், குழந்தை பிறப்பிற்கு பின் வயிற்றில் ஏற்படும் கோடுகள் போன்றவற்றிக்கு வல்லாரை இலையை அரைத்து பூசலாம். தழும்புகள் மறையும்.
தோலில் தொற்று நோய் வராது பாதுகாக்கும். ரத்தத்தை தூய்மைபடுத்தும். உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கும். வாய்புண், தொண்டைப்புண் மற்றும் வயிற்றுபுண்களை ஆற்றும்.
அதிகமாக பேசும் தொழிலில் உள்ளவர்கள் மற்றும் பாடகர்கள் வல்லாரை தேநீரை வாரம் இருமுறை பயன்படுத்த தொண்டை புண் மற்றும் உடல் சூடு காரணமாக ஏற்படும் தொண்டை வலி நீங்கும்.
‘வெரிகோஸ் வெயின்’ என்ற ‘வெரிகோஸ்’ நாளங்களின் புடைப்பு பலருக்கு தீராத தொல்லை கொடுக்க கூடிய நோயாக உள்ளது. ரத்த ஓட்டம் பாதிப்படையும் காரணத்தினால் நாளங்கள் புடைத்து விரைப்பு தன்மையை இழந்து தளர்ந்து விடுவதால் ரத்தம் நாளங்களில் தேங்கி புடைத்து விடும். அதிகமாக நின்று வேலை செய்பவர்களுக்கு இது உண்டாகும்.
வல்லாரையில் உள்ள ‘டிரைபெர்பைன்’ என்ற வேதியியல் பொருள் ‘கொலாஜன்’ மற்றும் ‘எலாஸ்டின்’ என்ற இணைப்பு திசுக்களை உற்பத்தி செய்து நாளங்களை உறுதிபடுத்த உதவுகிறது. நாளங்கள் உறுதியடையும் பொழுது ரத்த ஓட்டம் சீராக நடைபெற்று புடைப்பு குறைகிறது.
சிலருக்கு மூல நோயிலும் நாளங்கள் புடைத்து ரத்த ஓட்டம் தடைபடும். இதற்க்கு வல்லாரை சிறந்த மருந்தாகிறது. யானைக்கால் நோயாளிகள் வல்லாரை சேர்ந்த மருந்துகள் பயன்படுத்தினால் வீக்கம் குறையும்.
பெண்களுக்கு தொடைப்பகுதிகளில் ரத்த ஓட்ட பாதிப்பினால் சிலந்தி வலையை போல சிறு ரத்த குழாய்கள், தோலுக்கு அடியில் காணப்படும். இவர்கள் வல்லாரை சாப்பிட ரத்த ஓட்டம் அதிகரித்து நன்மை உண்டாகும்.
கண்களில் உள்ள ரத்த குழாய் பாதிப்பான ‘ரெட்டினொபதி’ க்கும் வல்லாரை பயன்தரும்.
குழந்தை மருத்துவத்தில் வல்லாரை முக்கிய பங்கு வகிக்கிறது. கணைய மாந்தம், சீதக்கழிச்சல், உடல் சூடு, குழந்தைகளுக்கு தோலில் உண்டாகும் நோய்களுக்கு வல்லாரை சார்ந்த மருந்துகளான வல்லாரை எண்ணெய், மற்றும் வல்லாரை நெய் போன்றவை மருந்தாக பயன்படுத்துப்படுகிறது.
வல்லாரை கொண்டு கூந்தல் தைலங்கள், குளியல் தைலங்கள், ஞாபக சக்தியை அதிகரிக்க மாத்திரைகள் மற்றும் லேகியங்கள் செய்யப்படுகிறது. இதை தகுந்த மருத்துவ ஆலோசனையின் பேரில் உட்கொள்ள வேண்டும்.
வல்லாரை சேர்ந்த உணவுகளை நாம் அடிக்கடி பயன்படுத்த ரத்த ஓட்டம் அதிகரித்து உடலில் புத்துணர்ச்சி ஏற்படும்.