
பூவரசம் மரம்
பூவரசம் மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் அனைத்தும் மருத்துவ குணம் உள்ளவையாகும். மஞ்சள் வர்ணத்தில் பூக்கும், பூவரசம் பூக்கள் அரிய மருத்துவ குணங்களை கொண்டது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை.
"பூவுக்கெல்லாம் அரசன்" போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால் இதன் பெயர் பூவரசு என்று அழைக்கப்படுகிறது. கிராமங்களில் வீடுகளில் முற்றத்திலும், தோட்டங்களிலும் பூவரசு மரம் இன்றும் இருப்பதை நாம் காணலாம். பூவரச மரம் மருத்துவப் பயன் கொண்ட மரமாகும். நூறாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று.
** விஷக் கடிக்கு:
பூவரசம் இலைகள் விஷத்தை போக்கும் தன்மை இருப்பதால் பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டு கடிகளுக்கு, மருந்தாக சித்த மருத்துவர்கள் பயன்படுத்திவந்தனர்.
பூக்களை நீர் விட்டு பாதியாக சுண்டக்காய்ச்சி இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்க வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து, குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியும் மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும்.
** பொடுகு நீங்க:
பூவரசங்காய் – 2, செம்பருத்திப்பூ – 2, பூவரச பழுத்த இலை – 2 இவற்றை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து குளித்துவந்தால் பொடுகு நீங்கும். சருமத்தில் தேய்த்து வந்தால் சருமம் பளபளப்பதுடன் கண் கருவளையம் மாறும்.
** சொறி, சிரங்கு நீங்க:
சொறி, சிரங்கினால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசி வந்தால் தோல் மென்மையாகும். சொறி சிரங்கு குணமடையும்.
** மூட்டு வீக்கம்:
வயதானவர்கள் மூட்டுப்பகுதியில், நீர் கோர்த்து வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவுடன் சம அளவு, காய் பட்டை, எடுத்து அரைத்து நல்ல எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி, மூட்டு வீக்கங்கள் மேல் பூசி வர, வீக்கம் குணமடையும்.
** பூவரசம் மரத்தின் பட்டையை இடித்து சாறு எடுத்து மூன்று மண்டலங்கள் அருந்தி வந்தால் காயசித்தி கிடைக்கும். ஆண் பெண் இருபாலரும் அருந்தலாம்.
** பழங்காலத்தில் பெண்கள் கருத்தரிப்பை தடுக்க பூவரசம் பட்டையை காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்துள்ளனர். இது கருத்தடை சாதனத்திற்கு இணையானது. கருப்பைக் கோளாறுகளை நீக்கும். ஆண்களுக்கு ஆண்மையை வலுப்படுத்தும்.
** உடலின் செயல்பாட்டிற்கு ஊக்க சக்தியை அளிப்பது கல்லீரல்தான். இந்த கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடல் பலவகையான இன்னல்களை சந்திக்க நேரிடும். இதனால் கல்லீரலைப் பலப்படுத்த வேண்டியது அவசியம். கல்லீரலின் பலவீனம்தான் மஞ்சள் காமாலை நோயின் தாக்கம்.
** பூவரச மரத்தின் பழுத்த இலை இரும்புச் சத்து நிறைந்தது. பழுத்த இலைகளுடன் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்துக் குடித்தால் மஞ்சள் காமாலை நோய் குறையும்.