
அதிமதுரம் என்று ஒன்று இருப்பது நிறைய பேருக்கு தெரியாது. ஆனால் அதில் இருக்கும் மருத்துவக் குணங்களை இயற்கையின் வரம் எனலாம்.
நம் நாட்டு குண்டுமணியின் வேர் அதிமதுரம் எனப்படுகிறது. மேனாட்டில் விளையும் குண்டுமணி வேரில் மருத்துவப் பயன் மிகவும் அதிகம். இவ்வேர் இனிப்புச் சுவையும் இனிமையான மணமும் நிறைந்தது.
அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவக் குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது.
1. அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.
2. ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.
3. தோல் நோய்கள், கண்நோய்கள், சளி, சரும அலர்ஜி குணமாகும். வேற்று மருந்துகளுடன் கூட்டியும், சூரணம், கஷாய ரூபத்தில், தனியாகவும் உபயோகித்து நோய்களிலிருந்து நன்மை பெறலாம்.
4. அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து மயிர்க்கால்களில் ( தலை மண்டை ) அழுத்தித் தேய்த்து அப்படியே 2 மணி நேரங்கழித்துக் குளிக்க தலைமயிரின் ( தலைமுடி ) குறைகள் நீங்கும்.
5. தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். கேசம் பட்டு போல் மினுமினுப்பாகவும் அகால நரையும் நீங்கும்.
6. தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும் . அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.
7. நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். இளநரை நீங்கும்.
8. அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும்.
9. இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்.
10. அதிமதுரத்துடன் சமஅளவு தோல் சீவிய சுக்கு சேர்த்து தூளாக்கி காலை, மாலை உணவுக்குப் பிறகு கால் டீஸ்பூன் தேனில் குழைத்து சிறிது சிறிதாக சுவைத்து உண்ண தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போகும்.
11. அதிமதுர இலையை அரைத்துப் பூசிவர உடலிலும், அக்குளிலும் உண்டாகும் கற்றாழை நாற்றம், அரையில் உண்டாகும் சொறி, சிரங்கு போகும்.
12. அதிமதுரத் துண்டு ஒன்றை வாயிலிட்டுச் சுவைத்து விழுங்க இருமல் தணியும். அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம், கொடி வேலி வேர்ப்பட்டை 17 கிராம் இலைகளைச் சூரணம் செய்து சித்திரை முதல் ஆடி வரை சாப்பிட்டுவர நோயணுகாது. தலைவலி, ஒற்றைத் தலைவலி, தீராத்தலைவலி, காய்ச்சல் தீரும். கண்கள் ஒளி பெறும்.