உங்களுக்குத் தெரியுமா? சிறுதானியங்களை தாராளமாக உண்டால் ஆரோக்கியத்திற்கு குறைவே இருக்காது…

Asianet News Tamil  
Published : Oct 06, 2017, 01:22 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
உங்களுக்குத் தெரியுமா? சிறுதானியங்களை தாராளமாக உண்டால் ஆரோக்கியத்திற்கு குறைவே இருக்காது…

சுருக்கம்

Do you know If you feel small you will not have health ...

அழகு, ஆயுள், ஆரோக்கியம் இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைவை. ஆயுள் வேண்டுமென்றால் ஆரோக்கியம் அவசியம். அதேவேளையில் அழகாக இருப்பதற்காக ஆரோக்கியமான உணவுகளை உண்பதன்மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்த பலன் கிடைக்கும்.

ஆனால், இந்த மூன்று வரங்களையும் ஒருசேரப் பெற சில முயற்சிகளையும் மெனக்கெடல்களையும் எடுக்கவேண்டியது அவசியம். அதில் எளிமையான, பின்பற்றக்கூடிய சில வழிமுறைகளைப் பார்க்கலாம்.

உணவு

குளியல் தினந்தோறும் அவசியமான ஒன்று. குளியல் என்றாலே தலை முழுகுவது என்றுதான் அர்த்தம். அதாவது தலை முதல் பாதம் வரை தண்ணீரால் நனைய வேண்டும்; அதுதான் குளியல். அதுவும் காலை 7 மணிக்குள் குளித்துவிடுவது நல்லது. தலையை தவிர்த்துவிட்டு உடல் மட்டும் நனைவது, முகம் மட்டும் கழுவுவது குளியல் கிடையாது.

வாரம் இருமுறை உச்சந்தலையிலும் உள்ளங்காலிலும் சூடுபறக்க எண்ணெய் தேய்த்து, சிறிது நேரம் வெயிலில் நின்று, அரப்பு தேய்த்து வெந்நீரில் குளிப்பது நல்லது. இதனால் தோல், கண், காது, மூக்கு தொடர்பான நோய்கள் நம்மை அண்டாது. எண்ணெய்க் குளியலோ சமையலோ இரண்டுக்குமே நல்லெண்ணெய்தான் சிறந்தது.

நல்லெண்ணெய் உண்மையிலேயே நல்ல எண்ணெய். மேலும் அப்போது உடலுக்குப் பாசிப்பயறு, கோரைக்கிழங்கு, பூலாங்கிழங்கு, வெட்டிவேர், விலாமிச்சைவேர், சந்தனம், கார்போகரிசி சேர்த்துப் பொடித்த நலங்குமாவு நல்லது.

முளைகட்டிய பச்சைப் பயறும் கறுப்பு சுண்டலும் சிறியவர் முதல் பெரியவர் வரை சாப்பிடவேண்டும். இவைதான் ஹெல்த்தியான நொறுக்குத்தீனி.

தீட்டப்பட்ட வெள்ளை அரிசியைத் தவிர்த்துவிட்டு, பாரம்பர்ய அரிசி வகைகளுக்கு மாறுங்கள். சிறுதானியங்களை தாராளமாக உண்ணுங்கள். ஒருவேளை உணவிலாவது சிறுதானியம் இருக்கும்படி மெனுவை வடிவமைத்துப் பழகுங்கள்.

காரத்துக்காக மிளகு இருக்க, நம் சமூகம் இன்று மிளகாயைப் பயன்படுத்துகிறது. மிளகு ஆரோக்கியம் மட்டுமல்ல, சுவையும்கூட. மிளகு ரசம், மிளகு கோழிக்குழம்பு என மிளகை மையப்படுத்தி இட்ட பெயரும் சமையலையும் மறக்க வேண்டாம்.

கொடம்புளி… நம் பாரம்பர்ய சமையலில் முக்கிய இடம்பிடித்த ஒன்று. இது கொழுப்பைக் கரைத்து உடலை மெலியச் செய்யும். அரேபிய நாட்டுப் புளியை சமையல் அறையிலிருந்து விரட்டிவிட்டாலே நோய்களும் வெளியேறிவிடும்.

ஆரோக்கியமான உணவு

சுவையான உணவுகள், ஆரோக்கியமான உணவுகள், பாதுகாப்பானது எனச் சான்றிதழ் தரும் உணவுகள், அவசியமான உணவுகள், அவசியமற்ற உணவுகள் ஆகியவற்றில் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது ஆரோக்கியமான மற்றும் அவசியமான உணவுகளாக இருக்கவேண்டும். சுவையான உணவுகளை அளவாக சாப்பிடலாம். மற்றவை உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.

வெல்லம்

அழகுக்காகத்தான் வெள்ளை சர்க்கரை. ஆனால், இது உடல்நலத்துக்கு உதவாது. சத்துகள் நிறைந்த வெல்லம், கருப்பட்டி (பனைவெல்லம்), பனங்கற்கண்டு, தேன் ஆகியவைதான் நம் உடல்நலத்தை மேம்படுத்தும் இனிப்புகள்.

நெல், கேழ்வரகு, தினை, வரகு, கம்பு, வெள்ளைச் சோளம், சாமை, குதிரைவாலி, பனிவரகு, காடைக்கண்ணி ஆகியவை அடிக்கடி நம் ஃபுட் மெனுவில் இடம் பெறட்டும்.

ஆறு மாதத்துக்கு ஒருமுறை பேதிக்கு விளக்கெண்ணெய் குடிப்பது நல்லது. மருத்துவர் ஆலோசனையுடன் தனிநபர் எந்த அளவுக்குச் சாப்பிடலாம் என்பதைத் தெரிந்துகொண்டு குடிப்பது நல்லது.

காலை எழுந்ததும் பல் துலக்குவதற்கு முன்பாக, செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயில் வாய் கொப்பளிக்கலாம். அதன் வழவழப்பு நீங்கும் வரை கொப்பளித்துத் துப்பிவிடலாம். இதனால், ஒற்றைத்தலைவலி, வாய் துர்நாற்றம், நரம்புத் தொடர்பான பிரச்னைகள், வயிறு தொடர்பான பிரச்னைகள் ஆகியவை நீங்கும்.

உறக்கத்தை விரும்பாத உயிர்கள் இல்லை. உழைப்புக்கு ஏற்றாற்போல நம் உடலைத் தயார்படுத்த குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம். இரவு உணவு முடிந்ததும் குறுநடையும் உறக்கமும் அடுத்த நாளை புத்துணர்வாக மாற்றும்.

குடும்பத்தின் காலை பானம் நீராகாரமாக இருக்கட்டும். இது வழிப்போக்கர்களின் தாகம் தீர்த்த அமிர்தம். மலச்சிக்கலை தீர்க்கும் அமுதபானம், வெயில் காலத்தின் மருத்துவர், சோர்வைப் போக்கும் பூஸ்டர், உயிர்த்தாதுக்கள் நிறைந்திருக்கும் உணவுப் பொக்கிஷம். இதைச் செய்யத் தனியாக நேரம் ஒதுக்கத் தேவையில்லை. அன்றைய மீதமான சோற்றில் வடித்த கஞ்சியும், நீரும் ஊற்றி வைக்க மறுநாள் நீராகாரம் தயார்.

மேற்கத்திய நாடுகளில் வெந்தயத்தின் கசப்பை நீக்கி, அதில் உள்ள சத்துகளைக்கொண்டு பேக்கரி உணவுகளைத் தயாரிக்கின்றனர். ஆண் பெண் இருவருக்கும் காதல் ஊட்டும் உணவாக வெந்தயம் இருப்பதால், வெந்தயம் நிச்சயம் உங்களது உணவில் இடம் பெறவேண்டியது அவசியம்.

நொறுக்குத்தீனி

‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்பார்கள். அதனால், நொறுங்கத் தின்ன பாரம்பர்ய அரிசிச் சோறும் குடிக்க நீராகாரமும் இருந்தால் 100 வயதுக்கு உத்தரவாதம் உண்டு.

வாரம் இருமுறையாவது பற்பசைகளுக்கு விடுமுறை கொடுத்து, பற்பொடிகளை அனுமதியுங்கள். ஆலம் விழுதுப் பொடி, பட்டை, எலுமிச்சைத் தோல் காயவைத்து கருக்கிய கரி, கல் உப்பு, கிராம்பு, வேலமரக்குச்சி ஆகியவை கொண்ட பற்பொடியை தயார் செய்து பயன்படுத்துங்கள்.

கரும்பைக் கடித்து ருசிப்பது, சீடை, முறுக்குகளை மெல்வது, கேரட், கொய்யாவைக் கடித்துச் சாப்பிடுவது போன்றவை பற்களின் வலிமையைக் கூட்டும் பயிற்சிகள் ஆகும்.

ஒவ்வொரு காலை விடியலுக்கும், கடனாளிகளாக இருப்பது அனைத்து உயிர்களும். ஆடு, மாடு முதல் மனிதன் வரை அனைத்து உயிர்களும் தங்களது கடனைத் தீர்க்க வேண்டியது கட்டாயம். கடனை பைசல் செய்யவில்லை என்றால் கடனில் துன்பப்பட வேண்டும். ஆம்… மலச்சிக்கல் பல சிக்கல்களை ஏற்படுத்தும். காலை எழுந்ததும் சிறுநீரும் மலமும் வெளியேறவேண்டியது கட்டாயம். எப்போதுவேண்டுமென்றாலும் வெளியேற்றிக்கொள்ளலாம் என்ற அலட்சியம் நோய்க்கு வாசலாக அமைந்துவிடும்.

உடலுழைப்பு இல்லாத நபர்கள்தான் இன்றைக்கு அதிகம். இவர்களுக்கான பிரத்யேக தேநீர் ஒன்று இருக்கிறது. கரிசாலை இலை, முசுமுசுக்கை இலை, தூதுவளை இலை, சீரகம், பசும்பால் அல்லது நீர், கற்கண்டு சேர்த்துக் காய்ச்சி எடுத்தால் சுவையான தேநீர் தயார். இதைக் குடித்துப் பழகுங்கள். மூளை, நரம்புகள் புத்துணர்வு அடையும். மூளையை ஆயுதமாகப் பயன்படுத்தும் ஆட்களுக்கு இந்தத் தேநீர் ஒரு வரம்.

தேநீர்

மதிய உணவில் சாம்பாரோ, புளிக்குழம்போ சாப்பிடுவதற்கு முன், முதலில் ஒருவாய் அன்னப்பொடியுடன் சாப்பிட்டுவிட்டு, பிறகு பிடித்ததைச் சாப்பிடுங்கள். அதென்ன அன்னப்பொடி. சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஓமம், பெருங்காயம், இந்துப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து அரைத்துத் தயாரிக்கப்படும் பொடியே அன்னப்பொடி. உணவுப் பாதையில் உள்ள தொந்தரவுகளை நீக்கும். வாய்வுத் தொல்லையைத் தடுக்கும். கல்லீரலுக்கு நல்லது.

காலையில் 5 முதல் 6 மணிக்குள் எழுந்திருப்பது நல்லது. இதனால் உடல்நலமும் மனநலமும் மேம்படும்.

காலை எழுந்ததும் சுத்தமான தண்ணீர், வெந்நீர், நீராகாரம், சுக்கு – இஞ்சி, கருப்பட்டி காபி, கேழ்வரகு கூழ், வடித்த கஞ்சி ஆகியவற்றை அருந்துவது மிகவும் நல்லது.

தினமும் 30 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி செய்வது, 15 நிமிடங்களுக்கு யோகாவும் தியானமும் செய்யலாம். 5 நிமிடங்கள் மூச்சுப் பயிற்சி ஆகியவை உடலை பலமாக்கும். புத்துணர்வூட்டும்.

காஷ்மீர் ஆப்பிள், ஆஸ்திரேலியன் ஆரஞ்சு, அயல்நாட்டு பெர்ரிகளைவிட நம் ஊரில் விளையும் கொய்யா, மாதுளை, இலந்தை, அத்தி, பப்பாளி, வாழை, நெல்லி, சாத்துக்குடி, கமலாப்பழம் ஆகியவை நல்லது.

தேவையான சிலவகை மூலிகைச் செடிகளை, மாடிகளிலோ பால்கனியிலோ வளர்த்து எடுப்பது உங்களின் சாமர்த்தியம்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake