
இந்த வீட்டு வைத்தியங்கள் அனைத்துமே பெரிதாக செலவு வைக்காமல், பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல், ஆரோக்கியத்தை உங்களுக்குப் பரிசளிக்கக் கூடியவை.
சுக்கு வெந்நீர்
** மாலையில் சுக்கு காபி குடிக்கலாம். இதை சுக்கு காபி என்று சொல்வதைவிட சுக்கு வெந்நீர் என்பதே சரியாக இருக்கும்.
சுக்கு வெந்நீர் செய்ய மிளகு 10 கிராம் என்றால், சுக்கு 20 கிராம், 40 கிராம் தனியா (கொத்தமல்லி விதை), நான்கைந்து ஏலக்காய் சேர்த்துப் பொடியாக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, கருப்பட்டி (பனைவெல்லம்) சேர்த்து வடிகட்டிக் குடிக்கலாம்.
கிடைக்கும்பட்சத்தில் துளசி, தூதுவளை, ஓமவல்லி இலைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். சிற்றுண்டி ஏதாவது சாப்பிட விரும்பினால் ஓமவல்லி இலைகளை பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.
பூண்டுப்பால்
** இரவில் உறங்கப்போவதற்கு முன், பூண்டுப்பால் சாப்பிடலாம். பூண்டுப்பால் செய்ய 50 மில்லி பால், 50 மில்லி தண்ணீர், உரித்த பூண்டுப்பற்கள் 10 போட்டு பாதியாக வற்றும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
அடுப்பிலிருந்து கீழே இறக்குவதற்கு முன் 2 சிட்டிகை மஞ்சள்தூள், 2 சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளவும். பிறகு, பனங்கற்கண்டு (இல்லாதபட்சத்தில் சர்க்கரை) சேர்த்து கடைந்து சாப்பிடவும்.
மணத்தக்காளி சூப்
** ஜலதோஷம், தொண்டை கரகரப்பு, இருமல் இருந்தால்... மணத்தக்காளி சூப் நல்ல பலன் தரும். எப்படிச் செய்வது? மணத்தக்காளி கீரை, மிளகு, சீரகம், பூண்டு, சின்னவெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்து, பாதியாக வற்றியதும் இறக்கி வடிகட்டி, பொறுக்கும் சூட்டில் குடிக்கவும்.