
புடலங்காய்
இது சற்று நீரோட்டமுள்ள காய். சூடு உடம்புக்கு ஏற்றது. உடம்பின் அழலையைப் போக்கும்; தேகம் தழைக்கும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த கபங்களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றை போக்கும். இதை உண்டால் உணர்ச்சி பெருகும்.
கொத்தவரங்காய்
இது சிறுநீரைப் பெருக்கும். இதன் சுபாவம் சூடு. அதனால், இதைத் தொடர்ந்தாற்போல் உண்டால் சீதம் போகத் தொடங்கிவிடும். இது பித்தவாதக் கடுப்பு, கபம் இவற்றை உண்டாக்கும். அதனால் இது பத்தியத்திற்கு உதவாது.
இதன் கெட்ட குணங்களைப் போக்க இத்துடன் தேங்காய், பருப்பு, இஞ்சி,சீரகம் இவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும்.
வாழைத்தண்டு
இது பித்தத்தைத் தணிக்கக் கூடியது. இதன் சுபாவம் சூடு என்றாலும் சிறு நீரைப் பெருக்கும். வாழைத்தண்டுப் பச்சடி உடம்பின் உஷ்ணத்தைப் போக்கும். வாத பித்தம், உஷ்ணம் முதலியவற்றைத் தணிக்கும், கபத்தை நீக்கும்.
இதை உண்டால், குடலில் சிக்கிய மயிர், தோல், நஞ்சு இவற்றை நீக்கும்.
வாழைப்பூ
இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி,சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.
சிலர் குழந்தையின்மையால் பல மன வேதனைக்க்கு ஆளாவர். இவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.
பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.
வெண்டைக்காய்
இதன் சுபாவம் குளிர்ச்சி. இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும்; இதில் வைட்டமின் ‘சி’ , ‘பி’ உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை உண்டுவந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.
வெண்டைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் இளம் பெண்களுக்கு ஆப்பிள் பழம் போல அழகிய கன்னங்கள் உண்டாகும். மேலும் புஷ்டியான முகத்துடன் பளபளவென்று மின்னுவார்கள்.
வெண்டைக்காய் வேரை இடித்துப் பொடியாக்கி அதை இரவு உணவிற்குப் பின் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். 10 கிராம் பொடியை10 கிராம் அளவுள்ள நெய் மற்றும் தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்குத் தாது பலம் ஏற்படும்.
வெண்டைக்காயில் ஏ, பி மற்றும் சி ஆகிய வைட்டமின்கள் இருக்கின்றன. குடல் புண்ணால் ஏற்படும் வயிற்று வலிக்கு வெண்டைக்காய் ஒரு சிறந்த மருந்து. பண்டைய காலத்தில் லேசான காயம், நீர்க்கட்டு, பரு போன்ற பிரச்சினைகளுக்கு வெண்டைக்காய்ச் செடியின் இலைகளை அரைத்து மருந்தாகப் பயன்படுத்தினர்.
வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும் தன்மையும் வெண்டைக்காய்க்கு உண்டு. சீசனில் விலை குறைவாக இருக்கும்போது நிறைய வெண்டைக்காயை வாங்கி,காய வைத்து தேவைப்படும்போது சூப் தயாரித்துக் குடிக்கலாம்.
பாகற்காய்
வைட்டமின் ஏ, பி,சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
1 லிருந்து 2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் கலந்து அல்லது அப்படியே தினம் மூன்று வேளை சாப்பிட்டால் சர்க்கரை அளவு மூன்று மாதத்தில் குறையும்.
2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் சேர்த்துக் குடித்தால் மஞ்சள் காமாலை குணமாகும். இதைச் சாப்பிடும் போது கண்ணில் தெரியும் மஞ்சள் நிறமும் உடனே மறையும்.
3 லிருந்து 8 வயதுள்ள குழந்தைகளுக்கு அரை டீஸ்பூன் பாகற்காய் ஜுஸ் கொடுத்து வந்தால் பிற்காலத்தில் எந்த கல்லீரல் பாதிப்பும் இல்லை.
தினம் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும். பாகற்காய்சூட்டை கிளப்பும் என்பதால் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து சாப்பிடக்கூடாது.
சேப்பங்கிழங்கு
கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும்,பற்களையும் உறுதிப்படுத்தும்.
பீட்ரூட்
கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. ரத்தத்திலிருந்து உண்டாகும் சிவப்பு அணுக்கள் அதிகமாகும்.
தினம் 1/2 கப் பீட்ரூட் ஜுஸ் + 1/2 கப் கேரட் ஜுஸ், காலையில் எடுத்துக் கொண்டால், பிணியின்றி பல நாள் நீடித்து வாழலாம். உடலின் நோய் தடுக்கும் சக்தி பலமாகும்.