
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் வரும் ஒரு பெரும் பிரச்னை உடல்பருமன்.
பெரியவர்களைப் பொறுத்தமட்டில், உடல் உழைப்பு குறைந்துபோனது மிக முக்கியக் காரணம் என்றால், குழந்தைகளைப் பொறுத்த வரை நொறுக்குத்தீனிகள் மற்றும் மைதா நிறைந்த உணவுகள் உண்பது காரணமாகச் சொல்லப்படுகிறது.
ஹார்மோன் ஊசி செலுத்தப்பட்ட சிக்கன் உணவுகள் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளை உண்பதாலும் `ஒபிசிட்டி’ எனப்படும் உடல் எடை அதிகரிப்பு நிகழ்கிறது.
உடல் பருமனுக்கு வேறு காரணங்கள்!
பரம்பரையாக வரும் நோய்கள், ஹார்மோன் பிரச்னைகள், தூக்கமின்மை, அதிகக் கொழுப்புள்ள உணவுகளைச் சாப்பிடுவது, சத்தற்ற உணவுகளை அதிக அளவில் உண்பது, அதிகமாக மது அருந்துவது, மருந்தின் பக்க விளைவுகள் ஆகியவை உடல்பருமனுக்கான காரணங்களாக அமைகின்றன.
உடல்பருமனைக் குறைக்க ஆயுர்வேத மருத்துவத்தில் நிறைய வழிகள் உள்ளன.
1.. எலுமிச்சையும் தேனும்
ஒரு கப் சுத்தமான நீரை எடுத்துச் சூடுபடுத்திக்கொள்ளவும். மிதமாகச் சூடானதும் அதனுடன் எலுமிச்சைச் சாறு மற்றும் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக் குடிக்க வேண்டும்.
இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. சுமார் இரண்டு மாதங்கள் இதைத் தொடர்ந்து செய்துவர நல்ல பலன் தெரியும். இதில் ஒரு டேபிள்ஸ்பூன் கருமிளகு சேர்த்தும் குடிக்கலாம்.
2.. சுரைக்காய் ஜூஸ்
சுரைக்காயை தோல் மற்றும் நடுப்பகுதியை நீக்கிவிட்டு, மிக்ஸியில் அரைத்துச் சாறாக்கிக் கொள்ளவேண்டும். துளசி இலை மற்றும் புதினா இலையை அரைத்து சுரைக்காய் சாற்றுடன் கலந்து தினமும் குடிக்க வேண்டும்.
சுரைக்காய் உடல்பருமனுக்கு மிக நல்ல மருந்து. வயிற்றுப் பிரச்னைகள், இதயத் தமனி அடைப்பு போன்றவற்றுக்கும் இது பலன்தரும்.
3.. சீரக டீ
நான்கு அல்லது ஐந்து கப் நீரைச் சூடாக்கிக்கொள்ளவும். அதனுடன் அரை டேபிள்ஸ்பூன் சீரக விதை, கொத்தமல்லி விதை, பெருஞ்சீரக விதை சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடம் சூடாக்கி ஃப்ளாஸ்கில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். இதைக் குடித்துவந்தால், நிச்சயம் பலன் உண்டு.