நீங்கள் பூண்டு சாப்பிடத் தொடங்கியதும் உங்கள் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள்…

First Published May 15, 2017, 12:35 PM IST
Highlights
Amazing changes in your body when you start to eat garlic ...


“பூண்டு கைவசம் இருந்தாப் போருக்கே கிளம்பலாம்“ என்று கிராமப்புறங்களில் சொல்வர்.

தன் உடல் செரிமானம், சக்தி, கழிவு நீக்கம் என சகலத்திலும் உடலுக்கு உற்ற துணை புரிவது பூண்டு.

மருத்துவ உலகின் வரப்பிரசாதம். சைவம், அசைவம் என எல்லா வகை உணவிலும் பூண்டு தவிர்க்க முடியாதது.

பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.

இருமல், மூச்சுத்திணறல், மலக் கிருமிகளினால் ஏற்படும் தொற்று போன்ற பிரச்னைகள் உள்ள 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வெள்ளைப் பூண்டினை அரைத்து மிகவும் சிறிது அவர்களது நாக்கில் தடவினாலே போதும். நிவாரணம் கிடைக்கும்.

தலையில் பூச்சிவெட்டு ஏற்பட்டுக் கொத்துக்கொத்தாக முடி உதிர்வதைத் தடுக்கப் பூண்டுத்தோல் 50 கிராம் எடுத்து தேங்காய் எண்ணெயில் நன்கு வறுத்து, அதை அரைத்து, மறுபடியும் அதே எண்ணெயில் மைபோலக் கலந்து, பூச்சிவெட்டு உள்ள இடத்தில தடவிவர வேண்டும்.

5 பூண்டுப் பற்கள் எடுத்துத் தோல் நீக்கி 100 மில்லி பசும்பாலில் போட்டு வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்த பின்பு பூண்டைக் கடைந்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மார்புவலி, மூச்சு அடைப்பு சரியாகும்.

பூண்டுக் கஞ்சி சாப்பிடுவது கிராமத்து வழக்கம். தேவையான அளவு பூண்டினை எடுத்துத் தோல் நீக்கி, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை முறையே 50 கிராம் சேர்த்து அரைத்து, தூள் செய்து, அரை லிட்டர் பசும்பால் விட்டு வேகவைத்து, வற்றும் சமயத்தில் அதில் பனங்கற்கண்டைச் சேர்க்க வேண்டும். மாதம் இருமுறை பூண்டுக் கஞ்சி சாப்பிட்டால் ரத்தசோகை மாறி உடல் வலிமை பெறும்.

பூண்டுக் கஞ்சியுடன் ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்து சாப்பிட்டு வர ஆண்களின் வீரியக்குறைவு சரியாகும். மேலும் மலச்சிக்கல், சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் ஆகியவையும் சரியாகும்.

10 வயதுக்கு உட்பட்டவர்கள் தினமும் 2 பூண்டுப் பற்களும், 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 3 பூண்டுப் பற்களும், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தினமும் 5 பூண்டுப் பற்களும் பனங்கற்கண்டுடன் சேர்த்து உண்டு வர உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை குணமாகும்.

உயர் ரத்த அழுத்தம், ரத்த உறைவு, சீரற்ற ரத்த ஓட்டம் ஆகியவற்றுக்குப் பூண்டு நல்ல பலன் தரும். பூண்டுப் பல் 5 எடுத்து அத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு, அரைத்துத் தூள் செய்து, பால் கலந்து உண்டுவர ரத்த ஓட்டம் சரியாகும். வாதநோய்கள் (பக்கவாதம், மூட்டுவாதம், சுண்டுவாதம், நடுக்குவாதம், ஒருபக்க வாதம்) குணப்படுத்தவும் பூண்டு சிறந்த மருந்து.

click me!