Published : Jul 08, 2025, 11:00 PM ISTUpdated : Jul 08, 2025, 11:01 PM IST
இந்தியா Project-77 திட்டத்தின் கீழ் 6 அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கி வருகிறது. இவை அதிவேக ஏவுகணைகளுடன் எதிரி இலக்குகளைத் தாக்கும் வல்லமை கொண்டவை. இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும் உதவும்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த இந்திய கடற்படை புதிதாக Project-77 என்ற திட்டத்தின் கீழ் ஆறு அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை (SSN) உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் அதிவேக ஏவுகணைகளுடன் எதிரி இலக்குகளைத் தாக்கும் வல்லமையுடன் உருவாக்கப்பட்டு வருகின்றன.
24
அதிவேக ஏவுகணைகளின் தேவை என்ன?
முன்னர், இந்தியாவின் பழைய நீர்மூழ்கிக் கப்பல்கள் நீண்ட தூரத் தாக்குதல்களுக்கு சப்-சானிக் (sub-sonic) ஏவுகணைகளைப் பயன்படுத்தின. இந்த ஏவுகணைகள் நீர் மேற்பரப்பிற்கு சற்று மேலே பறக்கும். இவற்றின் மிகப்பெரிய குறைபாடு என்னவென்றால், எதிரிப் பகுதிக்குள் நுழைந்தவுடன், அவற்றின் வேகம் குறைந்துவிடும். இதனால், தாக்குதலில் "அதிர்ச்சி தரும் அம்சம்" (element of surprise) இருக்காது. இதனால், எதிரி ரேடார்களுக்கு அவற்றை கண்டறியவும், கண்காணிக்கவும், இடைமறிக்கவும் போதுமான நேரம் கிடைக்கும். இந்த குறைபாடுகளை நீக்குவதற்காகவே அதிவேக ஏவுகணைகளின் தேவை எழுந்துள்ளது.
34
Project-77 என்றால் என்ன?
"Project-77" இன் கீழ், இந்திய கடற்படை ஆறு அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை (SSN) உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் DRDO (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு) மற்றும் L&T (லார்சன் அண்ட் டூப்ரோ) போன்ற முக்கிய இந்திய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தியாவின் தற்போதுள்ள அரியஹந்த்-வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து வேறுபட்டவை. அரியஹந்த் நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலோபாய ரீதியாக அணுசக்தி தடுப்பு ஆயுதமாக பயன்படுத்தப்படும் நிலையில், "Project-77" இன் கீழ் வரும் புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள் கூடுதல் வலுசேர்ப்பதாக இருக்கும். அவை நேரடியாகப் போர்ச் சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படும்.
இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தியாவின் கடற்பரப்பில் உள்ள முக்கிய பகுதிகள் மீதான பிடியை பலப்படுத்தும். மேலும், எந்த மோதல் சூழ்நிலையிலும் விரைவான பதிலுரைப்பை உறுதி செய்யும்.
DRDO அடுத்த தலைமுறை அதிவேக ஏவுகணைகளை 1,500 முதல் 2,000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் வகையில் உருவாக்கி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த விரிவாக்கப்பட்ட வரம்பு, இந்தியாவின் SSN நீர்மூழ்கிக் கப்பல்கள் எதிரி ரேடார்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் வரம்பிற்கு அப்பால் இருந்து கொண்டே ஆழமான தாக்குதல் பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதைக் குறிக்கிறது. இதன் மூலம் இந்திய கடற்படை, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது.