400 வருசமா மழையே பெய்யாத பூமியின் வறண்ட பகுதி! தண்ணீர் ஒரு சொட்டு கூட கூடாது!

First Published | Nov 14, 2024, 2:28 PM IST

400 ஆண்டுகளாக மழையே பெய்யாத அட்டகாமா பாலைவனத்தின் நிலப்பரப்பு தனித்துவமானது. அட்டகாமாவின் நிலக்காட்சி அறிவியல் புனைகதையில் மட்டுமே பார்க்கக்கூடிய காட்சிகளை நினைவுபடுத்தும். சில பகுதிகள் செவ்வாய் கிரகத்தைப்போலத் தோன்றும்.

Atacama Desert

வடக்கு சிலியில் 1000 கிலோமீட்டர்களுக்கு மேல் நீண்டுள்ள அஅட்டகாமா பாலைவனம் பூமியின் மிகவும் வியக்கத்தக்க நிலப்பரப்புகளில் ஒன்றாகும். இந்த அட்டகாமா பாலைவனம் உலகின் வறண்ட பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு பல நூறு வருடங்களாகவே மழை என்பதே கிடையாது. சில பகுதிகளில் ஒரு சொட்டு கூட தண்ணீரே இல்லாமல் பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன.

Atacama Desert

அட்டகாமாவின் நிலப்பரப்பு உண்மையிலேயே தனித்துவமானது. உப்பு அடுக்குகள், காற்றினால் செதுக்கப்பட்ட பாறை வடிவங்கள், பரந்த மணல் திட்டுகள் கொண்ட நிலப்பரப்பு அறிவியல் புனைகதையில் மட்டுமே பார்க்கக்கூடிய காட்சியை நினைவுபடுத்தும். பாலைவனத்தின் சில பகுதிகள் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பைப்போல காட்சி அளிக்கும்.

Latest Videos


Atacama Desert

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அதன் செவ்வாய் ரோவர்களுக்கான சோதனைக் களமாக இந்த பாலைவனத்தையே பயன்படுத்துகிறது. நிலவின் பள்ளத்தாக்கு போன்ற இடங்கள், காற்றினால் அரிக்கப்பட்ட சிகரங்கள் ஆகியவையும் இந்தப் பாலைவனப் பகுதியில் உள்ளன.

Atacama Desert

1570 முதல் 1971 வரை, அட்டகாமா பாலைவனத்தில் மழையே பெய்யவில்லை. 1971ஆம் ஆண்டில், அட்டகாமா பாலைவனத்தில் மழை பெய்தது. அதன் பிறகு நடந்த அட்டகாமா டெசர்ட் ப்ளூம் அனைவரின் கவனத்தையும் அட்டகாமாவின் பக்கர் ஈர்த்தது. திடீரென பெய்த மழையினால் பாலைவனம் முழுக்க வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கின. எல் நினோ நிகழ்வின் காரணமாக இதேபோன்ற மழை பெய்யும் போதெல்லாம், பாலைவனம் பூத்து குலுங்குகிறது. இயற்கையின் இந்த கண்கவர் காட்சியைக் காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அட்டகாமா சென்றுள்ளனர். கடைசியாக, இந்த ஆண்டு ஜூலை மாதம் அட்டகாமா பாலைவனம் பூக்களால் நிறைந்து காட்சி கொடுத்தது.

Atacama Desert

பூமியின் வறண்ட இடங்களில் ஒன்றாக இருந்தாலும், மழைப்பொழிவு கிட்டத்தட்ட இல்லாத நிலையிலும், சில உயிர்கள் இந்தப் பாலைவனத்தில் வசிக்கின்றன. பெரும்பாலும் அந்த உயிர்கள் வாழ துணைபுரிவது 'கமன்சாகா' எனப்படும் கடலோர மூடுபனிதான். அட்டகாமா பாலைவனம் உலகின் மிகப்பெரிய மூடுபனி பாலைவனம் என்றும் அழைக்கப்படுகிறது. கமன்சாகா எனப்படும் அடர்ந்த கடலோர மூடுபனி இந்தப் பாலைவனத்தின் அரிதான உயிரினங்களைத் தக்கவைக்க உதவுகிறது. பசிபிக் பெருங்கடலில் இருந்து வீசும் இந்த மூடுபனி, பாலைவனத்திற்கு சற்று ஈரப்பதத்தைக் கொடுக்கிறது. கடினமான தாவரங்கள், அரிதான பாசிகள் மற்றும் சில விலங்குகளுக்கு போதுமான தண்ணீர் இதிலிருந்து கிடைக்கிறது.

Atacama Desert

அட்டகாமா பாலைவனத்தின் சில பகுதிகளில் ஆண்டுக்கு ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான மழைப்பொழிவு பதிவாகிறது. ஆனால் வறண்ட பாலைவன நிலப்பரப்புக்கு அடியில் "அட்டகாமா நீர்நிலை" எனப்படும் பரந்த நிலத்தடி நீர் இருப்பு உள்ளது. இது பழங்கால நீர் படிவுகள் மற்றும் ஆண்டிஸ் மலைகளில் இருந்து வெளியேறும் நீரின் கலவை எனக் கருதப்படுகிறது.

Atacama Desert

அட்டகாமா வறண்டதாகத் தோன்றலாம். ஆனால், அட்டகாமாவில் எல் டாட்டியோ கீசர்ஸ் என்று அழைக்கப்படும் இயற்கை அதிசயத்தையும் பார்க்கலாம். இது அட்டகாமாவில் உயரமாக பீறிட்டு எழும்பும் வெந்நீர் ஊற்றுகள் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் அதிகாலைச் சூரியன் உதிக்கும்போது, ​​தரையில் வெந்நீர் ஊற்றுகளில் இருந்து நீராவி தூண்கள் போல எழுவதைக் காணலாம்.

Atacama Desert

அட்டகாமாவில் மற்றொரு அதிசயமான இடம் சிலியின் மிகப்பெரிய உப்புத் தளமான சாலார் டி அட்டகாமா. இங்கு பரந்து விரிந்த உப்புப் படிவுகளையும் ஃபிளமிங்கோ பறவைகளையும் காணலாம். சான் பெட்ரோ டி அட்டகாமா என்ற பகுதி அட்டகாமா பாலைவனத்தின் மையமாக உள்ளது. இது அட்டகாமெனோ பழங்குடி கலாச்சாரத்தின் தாயகமாக விளங்கும் ஒரு அழகான நகரம். பழங்கால கல்வெட்டுகள், பழைய கோட்டை இடிபாடுகள் மற்றும் துடிப்பான உள்ளூர் சந்தைகளை இங்கே பார்க்கலாம்.

click me!