உனக்கு நாங்க இருக்கோம் ராசா... ஆதரவற்ற இளைஞரின் திருமண அழைப்பை ஏற்று படையெடுத்து வந்த 10 ஆயிரம் பேர் - சீனாவில் நெகிழ்ச்சி சம்பவம்

Published : Nov 02, 2026, 07:51 PM IST

சீனாவில் தனக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்றும், தனது திருமண விழாவில் கலந்துகொண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் இளைஞர் ஒருவர் வலைத்தளத்தில் விடுத்த அழைப்புக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்த சம்பவம் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

PREV
15
சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த இளைஞர்!

சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள இலியாங் மாவட்டம், யூன்பெங் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஜூ ஜன்காங். சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர், ஐந்து வயதாக இருந்தபோது தாயும் மறுமணம் செய்துகொண்டு பிரிந்து சென்றுவிட்டார். அவரை அன்புடன் வளர்த்து வந்த பாட்டியும், ஜூவுக்கு ஏழு வயதாக இருந்தபோது உயிரிழந்தார். இதனால் தனது மூத்த சகோதரருடன் வளர்ந்த அவர், இடைநிலைக் கல்விக்குப் பிறகு படிப்பைத் தொடர முடியாமல் வேலைக்குச் சென்றார்.

கட்டுமானப் பணி, டெலிவரி உள்ளிட்ட பல்வேறு வேலைகளைச் செய்து கிடைத்த வருமானத்தில் சிறுகச் சிறுகப் பணத்தைச் சேமித்து வந்தார். நீண்டகால உழைப்பின் மூலம் சேகரித்த 1.6 லட்சம் யுவான், இந்திய மதிப்பில் சுமார் 20 லட்சம் ரூபாயை வைத்து தனது காதலியைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார். திருமண ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வந்தன.

25
திருமணப் பரிசாக பணம் வேண்டாம் என மறுத்த மணப்பெண் வீட்டார்!

மணப்பெண் வீட்டார் திருமணப் பரிசாக எந்தத் தொகையையும் எதிர்பார்க்காத நிலையில், ஜூ தானாக முன்வந்து 1.28 லட்சம் யுவானை வழங்க முயன்றுள்ளார். ஆனால், மணப்பெண்ணின் குடும்பத்தினர் அந்தப் பணத்தை ஏற்க மறுத்ததுடன், அதனை வீடு கட்டுவதற்குப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், திருமணத்தில் கலந்துகொள்ள இரு குடும்பங்களையும் சேர்த்து மிகக் குறைவான உறவினர்களே இருப்பார்கள் என்பதை உணர்ந்த ஜூ மனமுடைந்தார். தனது வாழ்க்கையின் முக்கியமான நாளில் திருமண மண்டபம் வெறிச்சோடிக் காணப்படக்கூடாது என்பதே அவரது கவலையாக இருந்தது. இதையடுத்து, அக்டோபர் 25ஆம் தேதி சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்ட வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்தது.

35
சமூக வலைத்தளத்தில் உருக்கமான அழைப்பு!

அந்த வீடியோவில், தனக்கு தந்தையும் தாயும் இல்லை என்றும், உறவினர்களின் எண்ணிக்கையும் குறைவு என்றும் உருக்கமாகத் தெரிவித்தார். தனது திருமணத்தில் குறைந்தபட்சம் 10 அல்லது 20 பேராவது கலந்துகொண்டு உணவு மேசைகளை நிரப்பினால் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் கேட்டுக்கொண்டார். பணமோ விலை உயர்ந்த பரிசுகளோ தேவையில்லை; தங்களுடைய அன்பையும் ஆதரவையும் மட்டும் வழங்கினால் போதும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

45
10 ஆயிரம் பேர் திரண்ட பிரம்மாண்ட திருமண விழா!

ஜூவின் இந்த வேண்டுகோள் இணையத்தில் வேகமாகப் பரவியது. முதலில் 10 அல்லது 20 பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அடுத்த சில நாட்களிலேயே நூற்றுக்கணக்கானோர் வருவதாகத் தெரிவித்தனர். அக்டோபர் 27, 28 ஆகிய தேதிகளுக்குள் வருகை தர விரும்புவோரின் எண்ணிக்கை 2,000 முதல் 3,000 வரை உயர்ந்தது. இறுதியில், அக்டோபர் 31ஆம் தேதி நடைபெற்ற திருமண விழாவில் சீனாவின் பல்வேறு மாகாணங்களில் இருந்து சுமார் 10,000 பேர் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

குவாங்டாங், சிச்சுவான், சோங்கிங் உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளில் இருந்தும் பலர் பயணம் செய்து வந்தனர். இதனால் அந்தப் பகுதியில் உள்ள ஹோட்டல்கள் அனைத்தும் நிரம்பின. முதலில் திட்டமிடப்பட்டிருந்த திருமண அரங்கில் இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு இடமளிக்க முடியாததால், விழா அருகிலிருந்த பெரிய சதுக்கத்திற்கு மாற்றப்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் ஏராளமான போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், தொலைத்தொடர்பு பாதிக்கப்படாமல் இருக்க தற்காலிக செல்போன் சிக்னல் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டது.

55
பரிசுப் பொருட்களுடன் குவிந்த மக்கள்

திருமணத்திற்கு வந்தவர்கள் வெறும் வாழ்த்துகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. குளிர்சாதனப் பெட்டி, ஹீட்டர், சமையல் எரிவாயு அடுப்பு, காய்கறிகள், உணவுப் பொருட்கள் என பல்வேறு பரிசுப் பொருட்களைக் கொண்டு வந்தனர். சிலர் பன்றி, மாடு, வாத்துகள் போன்றவற்றையும் வழங்கினர். சமையல் கலைஞர்கள் தாமாகவே முன்வந்து சுமார் இரண்டு டன் கோழி இறைச்சியைக் கொண்டு உணவு தயாரித்தனர். இதனுடன் 6.6 மீட்டர் நீளமுள்ள பிரம்மாண்டமான நீல நிற கேக்கும் தயாரிக்கப்பட்டது. ஆடம்பரமான திருமண வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு, மணமக்களின் வீடும் அழகாக அலங்கரிக்கப்பட்டது.

தனது திருமணத்திற்கு 10 அல்லது 20 பேர் வந்தால் போதும் என்று எதிர்பார்த்த இளைஞருக்கு, ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி அளித்த அன்பும் ஆதரவும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. இந்தத் திருமண விழாவின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ரத்த உறவுகள் இல்லாவிட்டாலும் அன்பும் மனிதநேயமும் மனிதர்களை ஒன்றிணைக்கும் என்பதை இந்தச் சம்பவம் உலகிற்கு உணர்த்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories