லிபியாவில் முயம்மர் கடாஃபி, 1969ம் ஆண்டு ராணுவ கிளர்ச்சி மூலம் ஆட்சியை கைப்பற்றிய போது, லிபிய மக்களின் மீட்பராக பார்க்கப்பட்டார். அப்போது 27 வயதான இளம் ராணுவ தளபதியான கடாஃபி, சக ராணுவத்தினரால் அண்ணா என்று செல்லமாக கூப்பிடப்பட்டார். அந்த அளவுக்கு அவருக்கு நற்பெயர் இருந்தது. அவரும் ஆட்சிக்கு வந்தபுதிதில் தன்னை மக்களின் தலைவனாகவே காட்டிக்கொண்டார்.
1942-ம் ஆண்டு பிறந்த முயம்மர் கடாஃபி Bedouin என்ற பழங்குடி இன பெற்றோருக்கு பிறந்தவர். தனது பழங்குடியின வழிமுறையை விளம்பரப்படுத்துவதில் அவர் பெருமைகொண்டார். எடுத்துக்காட்டாக தன்தை தேடி வரும் விருந்தாளிகளை ஒரு கூரை கொட்டகையில் வரவேற்பது முதல், தான் செல்லும் வெளிநாட்டு பயணங்களில் இந்த கொட்டகையை அவ்விடத்திற்கே கொண்டு சென்று அதை காட்சிப்பொருளாக வைப்பதுவரை தனது பழங்குடியின பின்புலத்தை அவர் மறந்ததில்லை.