வங்கதேசத்தின் அடுத்த பிரதமராகும் ‘இருண்ட இளவரசர்’..? யார் இந்த ‘டேஞ்சரஸ்’ தாரிக் ரஹ்மான்..?

Published : Dec 25, 2025, 05:33 PM IST

வங்கதேச தேசியவாதக் கட்சி ஆட்சிக்கு வந்தால் தாரிக் பிரதமராக வருவது உறுதி என்று கருதப்படுகிறது. இது நடந்தால், அவரது தந்தை, தாய்க்குப் பிறகு அவரது குடும்பத்தில் மூன்றாவது அரச தலைவராக இருப்பார் தாரிக்.

PREV
14
யார் இந்த தாரிக் ரஹ்மான்..?

முன்னாள் வங்கதேச பிரதமர் கலீதா ஜியாவின் மூத்த மகன் தாரிக் ரஹ்மான் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு தனது நாட்டிற்குத் திரும்பினார். வங்கதேச தேசியவாதக் கட்சி தலைவர் தாரிக் ரஹ்மான் இன்று தனது மகள், மனைவியுடன் டாக்கா விமான நிலையத்தில் தரையிறங்கினார். 2008 முதல் லண்டனில் வசித்து வரும் ரஹ்மான், பிப்ரவரி தேர்தல்களில் வங்கதேசத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் பிரமுகர்களில் ஒருவராகவும், அடுத்த பிரதமருக்கான சாத்தியமான வேட்பாளராகவும் பார்க்கப்படுகிறார். இருப்பினும், அவரது தாயார் ஆட்சியில் இருந்த காலத்தில், ரஹ்மான் பல கடுமையான குற்றச்சாட்டுகளால் சூழப்பட்டார். வங்கதேசத்தின் ‘இருண்ட இளவரசர்’ என்றும் அழைக்கப்பட்டார்.

60 வயதான தாரிக் ரஹ்மான், முன்னாள் வங்கதேச பிரதமர் கலீதா ஜியா- முன்னாள் ஜனாதிபதி ஜெனரல் ஜியாவுர் ரஹ்மானின் மூத்த மகன். 2007 ஆம் ஆண்டு இராணுவ ஆதரவு இடைக்கால அரசு ஆட்சியில் இருந்தபோது ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தின் போது ரஹ்மான் கைது செய்யப்பட்டார். 2008 ஆம் ஆண்டு, நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. சிகிச்சைக்காக லண்டனுக்குச் செல்ல அனுமதித்தது. டாக்காவுக்குத் திரும்பினால் வழக்குத் தொடரப்படும், தண்டனைக்கு உள்ளாவோம் என்பதால், அன்றிலிருந்து அவர் லண்டனில் வசித்து வருகிறார்.

24
தாரிக் ரஹ்மான் மீதான குற்றச்சாட்டுகள்

ஷேக் ஹசீனாவின் பேரணியில் நடந்த கையெறி குண்டுத் தாக்குதலுக்காக, 2018 அக்டோபரில் தாரிக் ரஹ்மானுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் 2004 ஆம் ஆண்டு கலீதா ஜியாவின் அரசாங்கத்தின் போது நடந்தது, அதில் ஹசீனா மயிரிழையில் தப்பினார். ரஹ்மானும் பல கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். ஆனாலும், இந்த குற்றச்சாட்டுகளை வங்கதேச தேசியவாதக் கட்சி தொடர்ந்து மறுத்து வருகிறது. அவை அரசியல் நோக்கம் கொண்டது என்று கூறியது.

மே 2023-ல், வங்காளதேச செய்தித்தாள் டாக்கா ட்ரிப்யூன், 2001-06 காலகட்டத்தில் வங்கதேச தேசியவாதக் கட்சி அரசு லஞ்சம், நிதி முறைகேடுகள் குறித்த ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் மூன்று பகுதி தொடரை வெளியிட்டது. இது வங்கதேச தேசியவாதக் கட்சி தலைவர்கள், ரஹ்மான் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியது. இந்தத் தொடர் ரஹ்மானை "இருண்ட இளவரசர்" என்று கூறியது.

34
சட்டவிரோத சொத்துக்களை வைத்திருக்கும் தாரிக்

ஃபர்ஸ்ட்போஸ்ட் தகவல்படி, டாக்கா ட்ரிப்யூன் அறிக்கை ரஹ்மான் மீது ஊழல், ஊடகங்களை மிரட்டியதாக குற்றம் சாட்டியது. அமெரிக்க தூதரக கேபிள்களை மேற்கோள்காட்டி, ரஹ்மான் மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள செல்வத்தை சட்டவிரோதமாக குவித்ததாக தெரிவிக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் சட்டவிரோத சொத்துக்களைக் குவித்ததற்காக ரஹ்மானுக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 2024-ல் தாரிக் ரஹ்மான், அவரது கட்சிக்கு அதிர்ஷ்டமாக மாறியது. மாணவர் போராட்டங்கள் வன்முறையாக மாறிய பிறகு, அவாமி லீக் அரசாங்கம் வீழ்ந்தது. ஷேக் ஹசீனா நாட்டை விட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்றார். இந்த மாற்றம் தாரிக் ரஹ்மானுக்கு அரசியல் ரீதியாக பயனளித்தது மட்டுமல்லாமல், அவருக்கு குறிப்பிடத்தக்க சட்ட நிவாரணத்தையும் வழங்கியது.

ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, டாக்காவில் ஆட்சிக்கு வந்த முகமது யூனுஸின் இடைக்கால நிர்வாகம், கலீதா ஜியா தாரிக் ரஹ்மானுக்கு பல நிவாரணங்களை வழங்கியது. யூனுஸின் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டதில் இருந்து, நிலுவையில் உள்ள 84 வழக்குகளில் தாரிக் விடுவிக்கப்பட்டார். 2004 டாக்கா கையெறி குண்டுத் தாக்குதல், பணமோசடி, தேசத்துரோகம் மற்றும் ஜியா அறக்கட்டளை தொடர்பான வழக்குகள் இதில் அடங்கும்.

தாரிக் ரஹ்மான் தனக்கு எதிரான சட்ட வழக்கு முடிவடைந்ததைத் தொடர்ந்து, டிசம்பரில் லண்டனில் இருந்து டாக்கா திரும்புவதாக அறிவித்தார். பிப்ரவரி தேர்தல்களைப் பற்றி குறிப்பிடுகையில், ரஹ்மான், "இது மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தேர்தல். நான் இதிலிருந்து விலகி இருக்க முடியாது; நான் டாக்காவிற்கு வருகிறேன்" என்றார்.

44
தாக்கத்தை ஏற்படுத்துவாரா தாரிக்?

பங்களாதேஷுக்கு தாரிக் ரஹ்மான் திரும்புவது, நாட்டில் தேசியத் தேர்தல்களுக்கு சில வாரங்களுக்கு முன்பு வருகிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள தேர்தலுக்காக பி.என்.பி. தனது அடிமட்ட இருப்பை வலுப்படுத்த முயற்சிக்கிறது. தாரிக் டாக்காவிற்கு திரும்புவது தொண்டர்கள், ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தும் என்று கட்சி நம்புகிறது. அவாமி லீக் இல்லாத நிலையில் வங்கதேச தேசியவாதக் கட்சி வலுவான அரசியல் சக்தியாக இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

தாரிக் ரஹ்மானின் தாயார் கலீதா ஜியா, கடந்த ஒரு மாதமாக கடுமையாக நோய்வாய்ப்பட்டு டாக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் விளைவாக, வரவிருக்கும் தேர்தல்களில் கட்சியை வழிநடத்த வங்கதேச தேசியவாதக் கட்சிக்கு ஒரு தலைவர் தேவை. தாரிக் டாக்காவிற்கு திரும்புவது இந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடும். வங்கதேச தேசியவாதக் கட்சி ஆட்சிக்கு வந்தால் தாரிக் பிரதமராக வருவது உறுதி என்று கருதப்படுகிறது. இது நடந்தால், அவரது தந்தை, தாய்க்குப் பிறகு அவரது குடும்பத்தில் மூன்றாவது அரச தலைவராக இருப்பார் தாரிக்.

Read more Photos on
click me!

Recommended Stories