இஸ்ரேலிய வீரர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் - ஹமாஸ் போர்நிறுத்தம் முறியும் நிலையை எட்டியுள்ளது. இஸ்ரேல் காசா மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் 104 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த அக்டோபர் 10 அன்று அமலுக்கு வந்தது. ஒரு இஸ்ரேலிய ராணுவ வீரர் கொல்லப்பட்ட சம்பவத்தால் மீண்டும் தாக்குதல் தொடங்கியுள்ளது. போர்நிறுத்தத்தை மீண்டும் அமல்படுத்துவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தாலும், நேற்று இரவு முழுவதும் காசா மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 104 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
24
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்
போர்நிறுத்தத்தை வெளிப்படையாக மீறிய ஹமாஸ் ஒரு இஸ்ரேலிய வீரரைக் கொன்றதால், நேற்று இரவு இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. "எந்தவொரு மீறலுக்கும் உறுதியான பதிலடி கொடுக்கப்படும்," என்றும் அதேசமயம் தாங்கள் தொடர்ந்து ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால், தெற்கு காசாவின் ரஃபா பகுதியில் இஸ்ரேலியப் படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குத் தாங்கள் பொறுப்பல்ல என்று ஹமாஸ் மறுத்துள்ளது. தொடர்ந்து போர்நிறுத்தத்திற்கு கட்டுப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
34
காசாவில் 104 பேர் பலி
காசா சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 104 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய ராணுவ வீரரின் மரணத்தை இஸ்ரேல் ராணுவம் இன்று (புதன்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளது.
"மஞ்சள் கோடு" (Yellow Line) எனப்படும் ஒப்பந்தத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த இஸ்ரேலியப் படைகள் மீது தாக்குதல் நடத்தி ஹமாஸ் போர்நிறுத்தத்தை மீறியதாக ஓர் இஸ்ரேலிய ராணுவ அதிகாரி குற்றம் சாட்டினார்.
சண்டை மீண்டும் வெடித்த போதிலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த போர்நிறுத்தத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒரு இஸ்ரேலிய வீரரை அவர்கள் கொன்றனர் என்று நினைக்கிறேன். எனவே இஸ்ரேலியர்கள் திருப்பித் தாக்கினர். அப்படி நடந்திருந்தால், அவர்கள் திருப்பித் தாக்கத்தான் வேண்டும்," என்று கூறினார்.
"போர்நிறுத்தத்தை எதுவும் பாதிக்கப் போவதில்லை. ஹமாஸ் மத்திய கிழக்கில் அமைதியின் ஒரு மிகச் சிறிய குழு. அவர்கள் ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டும்" என்றும் டிரம்ப் மேலும் தெரிவித்தார்.