400 மில்லியன் டாலர் மதிப்புள்ள போயிங் 747-8 ரக சொகுசு விமானத்தை கத்தார் மன்னர் குடும்பத்திடமிருந்து டிரம்ப் நிர்வாகம் நன்கொடையாகப் பெறுகிறது. இந்த விமானம் அமெரிக்க விமானப்படைக்கு மாற்றப்பட்டு, பின்னர் டிரம்ப் ஜனாதிபதி நூலகத்திற்குச் செல்லும்.
கத்தார் மன்னர் குடும்பத்திடம் இருந்து போயிங் 747-8 ரக சொகுசு விமானத்தை நன்கொடையாகப் பெற டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. திங்கள்கிழமை, மே 12ஆம் தேதி இந்த விமானம் ஒப்படைக்கப்படவுள்ளது. சுமார் 400 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இந்த விமானம், அமெரிக்க விமானப்படைக்கு மாற்றப்பட்டு, பின்னர் டிரம்ப் ஜனாதிபதி நூலகத்திற்குச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் கருத்து தெரிவிக்கையில், "40 வருட பழமையான ஏர் ஃபோர்ஸ் ஒன்னுக்கு பதிலாக, பாதுகாப்புத் துறைக்கு எந்த கட்டணமும் இல்லாமல், வெளிப்படையான மற்றும் பொதுவான பரிவர்த்தனையின் மூலம் 747 விமானம் பரிசாகக் கிடைப்பது, ஊழல்வாதியான ஜனநாயகக் கட்சியினருக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அந்த விமானத்திற்கு நாங்கள் அதிக விலை கொடுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
24
போயிங் 747 ஜெட்டுக்குள் என்ன இருக்கிறது?
400 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புடைய இந்த விமானம், இதுவரை கட்டப்பட்ட மிக ஆடம்பரமான தனிப்பட்ட ஜெட் விமானங்களில் ஒன்றாகும். இது டிரம்ப்பின் நீண்ட தூர பயணங்களுக்கு முதன்மை போக்குவரத்து முறையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் கத்தார் அமிரி விமானக் குழுவில் சேர்க்கப்பட்ட இந்த ஜெட், A7-HBJ என்ற பதிவெண்ணுடன் 2012 இல் வழங்கப்பட்டது. பின்னர் இது சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஏவியேஷன் நிபுணரான AMAC ஏரோஸ்பேஸால் பல ஆண்டு காலம் உட்புற மாற்றியமைக்கப்பட்டது. வணிக ரீதியான விமானம், பறக்கும் அரண்மனையாக மாற்றப்பட்டது.
இந்த ஜெட் விமானத்தில் 90 பயணிகள் மற்றும் 14 பணியாளர்கள் மட்டுமே அமர முடியும். வணிக ரீதியான விமானத்தில் 400க்கும் மேற்பட்டோர் அமரக்கூடியது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள இடங்கள் ஐந்து ஓய்வறைகள், ஒரு சுழல் படிக்கட்டு, ஒரு தனி குளியலறையுடன் கூடிய முழுமையான முதன்மை படுக்கையறை மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட பொருத்துதல்கள், சூடான தரை மற்றும் பளிங்கு அலங்காரங்களுடன் கூடிய 11 குளியலறைகள் போன்ற அதி சொகுசு வசதிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இதில் ஐந்து முழுமையாக செயல்படக்கூடிய சமையலறைகளும் உள்ளன.
34
நவீன தொழில்நுட்ப வசதிகள்
நவீன தொழில்நுட்பத்தில் PGA நிறுவனத்தால்Custom-ஆக உருவாக்கப்பட்ட பொழுதுபோக்கு அமைப்பு, 40 உயர் தெளிவுத்திறன் கொண்ட திரைகள், பல ப்ளூ-ரே பிளேயர்கள் மற்றும் ஆடியோ/வீடியோ ஆன் டிமாண்ட் (AVOD) வசதிகள் அடங்கும். பானசோனிக்கின் Ku-band மற்றும் ஹனிவெல்லின் JetWave Ka-band ஆகிய இரட்டை அதிவேக செயற்கைக்கோள் அமைப்புகள் தொடர்ச்சியான உலகளாவிய இணைப்பை வழங்குகின்றன.
இந்த விமானம் பல மண்டல ஒலி காப்பு அமைப்பையும் கொண்டுள்ளது, இது பறக்கும்போது சராசரியாக 50-52 டெசிபல் சத்தத்தை மட்டுமே வெளியிடுகிறது. மேலும் ஈரப்பதமூட்டப்பட்ட காற்று அமைப்பு மற்றும் அனைத்து அறைகளிலும் சிறப்பு குடிநீர் விநியோக அமைப்பும் இதில் உள்ளது.
பாதுகாப்பிற்காக, இந்த ஜெட் உயர் தெளிவுத்திறன் கொண்ட கண்காணிப்பு கேமராக்கள், அசைவு உணரிகள் மற்றும் ஊடுருவல் தடுப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளது. விமானத் தரவுகளின்படி, இந்த விமானம் மார்ச் 30 அன்று தோஹாவிலிருந்து புறப்பட்டு, பாரிஸ் மற்றும் பேங்கோர், மைனே வழியாக ஏப்ரல் 3 அன்று சான் அன்டோனியோ, டெக்சாஸை வந்தடைந்தது. இது தற்போது பாதுகாப்பான ஹேங்கரில் உள்ளது. அங்கு அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்ததாரரான L3Harris, ஜனாதிபதி தரத்திலான தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை நிறுவும் இறுதி கட்ட பணியை மேற்கொண்டு வருகிறார்.
இந்த பணிகள் முடிந்ததும், இந்த 747-8 விமானம் ஏர் ஃபோர்ஸ் ஒன்னாக செயல்படும் மிக நீளமான (76 மீட்டர்), வேகமான (மணிக்கு 650 மைல்கள்) மற்றும் அதிக தூரம் (8,886 மைல்கள்) செல்லக்கூடிய விமானமாக இருக்கும். அமெரிக்க அரசாங்கத்தின் அடுத்த தலைமுறை ஜனாதிபதி விமானக் குழுவில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இந்த ஜெட் தற்காலிகமாக டிரம்ப்புக்கான அந்தப் பங்கை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.