மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட வெள்ளை மாளிகை நிர்வாகம் தொடர் முயற்சிகளை எடுத்து வருவதாகக் கூறப்படும் வேளையில், ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் இந்தியப் பிரதிநிதி அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி வெளியிட்டுள்ள கருத்துக்கள் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. "அமெரிக்காவின் வரலாறு களங்கமானது, அவர்களை ஒருபோதும் நம்ப முடியாது" என அவர் நேரடியாகவே சாடியுள்ளார்.
ஈரானின் நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கிய இலாஹி, போர் நிறுத்தம் என்பது ஒருதலைப்பட்சமானது அல்ல என்பதை உறுதிபடக் கூறினார். "ஈரான் தாக்கப்படாவிட்டால் மட்டுமே போர் நிற்கும். அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்கும் வரை இந்தப் போர் முடிவுக்கு வராது" என்பதே ஈரானின் தற்போதைய தாரக மந்திரமாக இருக்கிறது.
அமைதி என்பது வார்த்தைகளில் மட்டும் இருந்தால் போதாது, அது செயலில் இருக்க வேண்டும் என்று கூறும் ஈரான், ஒரு சக்திவாய்ந்த நாடு எப்படி ஒரு பலவீனமான நாட்டைத் தாக்க முடியும் என்கிற கேள்வியையும் உலக நாடுகளின் முன் வைக்கிறது.
23
நாங்கள் சிந்தியது அப்பாவிகளின் ரத்தம் அல்ல!
சர்வதேச அரங்கில் ஈரான் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த இலாஹி, "நாங்கள் பதிலடி மட்டுமே கொடுத்துள்ளோம். ஒரு அப்பாவியின் இரத்தத்தைக் கூட நாங்கள் சிந்தவில்லை. லெபனான், காசா மற்றும் சிரியா உள்ளிட்ட ஒட்டுமொத்த மத்திய கிழக்கிலும் அமைதி நிலவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆனால், அந்த நிலங்களை யார் ஆக்கிரமித்துள்ளனர் என்பது குறித்து உலகம் விவாதிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
அமைதி ஏற்பட வேண்டுமானால், உலக நாடுகள் முதலில் அமெரிக்கா மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது ஈரானின் வாதம். எதிர்காலத்தில் ஈரான் மீது எந்தவிதமான தாக்குதல்களும் நடக்காது என்பதைப் பிற நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
33
இழப்பீடும் இறையாண்மையும்
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களால் ஈரானின் பள்ளிகளும் மருத்துவமனைகளும் அழிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய இலாஹி, அந்தச் சேதங்களுக்கு உரிய ஈடுசெய்தல் அவசியம் என்கிறார். ஒரு இறையாண்மை கொண்ட தேசம் தனது கண்ணியத்தைச் சமரசம் செய்துகொள்ளாது என்பதில் ஈரான் மிக உறுதியாக இருக்கிறது.
பேச்சுவார்த்தைகள் எப்படி அமைய வேண்டும் என்பதை ஈரானின் உச்ச தலைவர் தீர்மானிப்பார் என்றாலும், ஒப்பந்தத்தின் நோக்கம் என்ன என்பதை ஈரான் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டது. சுருக்கமாகச் சொன்னால், அடிபணிந்து போவதை விட, தனது பாதுகாப்பை உறுதி செய்வதிலேயே ஈரான் தற்போதைய கவனத்தைச் செலுத்துகிறது.