உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க வாஷிங்டன் சென்றுள்ளார். டிரம்ப், புடினை சந்தித்த பிறகு, நாளை இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்வு எட்டப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் உலகளாவிய முயற்சிகளுக்கு மத்தியில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்க திங்கள்கிழமை வாஷிங்டன் சென்றடைந்தார். இந்த சந்திப்பு தனிப்பட்ட முறையில் நடக்காமல், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மற்றும் நேட்டோ பொதுச் செயலாளர் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற உள்ளது.
25
புடின்-டிரம்ப் சந்திப்பிற்குப் பிறகு
இந்த சந்திப்பிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அலாஸ்காவில் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்துப் பேசினார். அது வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பாகக் கூறப்பட்டாலும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடனடி தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. மாறாக, உக்ரைன் அமைதி ஒப்பந்தம் குறித்த பொறுப்பு ஜெலன்ஸ்கியிடம் உள்ளது என டிரம்ப் கூறியதாக தகவல்கள் வெளியாகின.
35
ஜெலன்ஸ்கிக்கு ஆதரவாக ஐரோப்பா
டிரம்புடன் நடந்த முந்தைய சந்திப்பில், ஜெலன்ஸ்கி அவமானப்படுத்தப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. மீண்டும் ஒருமுறை அதேபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க, ஐரோப்பிய தலைவர்கள் ஒரு பிரதிநிதியை ஜெலன்ஸ்கியுடன் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். ஃபின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் அல்லது நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் ஜெலன்ஸ்கியுடன் பங்கேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
டிரம்புடன் நல்லுறவு கொண்ட ஸ்டப் மற்றும் மார்க் ரூட் இருவரும், ஜெலன்ஸ்கிக்கும் டிரம்புக்கும் இடையே எந்தவிதமான மோதலும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் செயல்படுவார்கள் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் கருதுகிறார்கள். மேலும், உக்ரைன் குறித்த எந்த ஒரு முடிவிலும் ஐரோப்பா புறக்கணிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதும் இதன் நோக்கமாகும்.
அலாஸ்காவில் புடினுக்கு டிரம்ப் அளித்த வரவேற்பால் ஐரோப்பிய தலைவர்கள் மத்தியில் ஒருவித பதற்றம் நிலவுகிறது. இந்த சந்திப்பில் டிரம்ப் மீண்டும் உக்ரைன் பிராந்தியங்களை விட்டுக்கொடுக்குமாறு ஜெலன்ஸ்கியிடம் கோரிக்கை விடுப்பாரோ என அவர்கள் கவலை அடைந்துள்ளனர். டிரம்பின் இந்த நிலைப்பாடு, புடினின் கோரிக்கைகளுக்கு அவர் இணங்கிவிட்டதாக இருக்கும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
55
முக்கியப் பேச்சுவார்த்தைகள்
ரஷ்யா, உக்ரைனின் இரு பிராந்தியங்களை முழுமையாகக் கைப்பற்றுவதற்கும், மற்ற இரு பகுதிகளில் படைகளை நிறுத்தி வைப்பதற்கும் முன்மொழிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முன்மொழிவுக்கு டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், டொனெட்ஸ்க் முழுவதையும் விட்டுக்கொடுக்க டிரம்ப் ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த கோரிக்கையை ஜெலன்ஸ்கி ஏற்க மறுத்துவிட்டார்.
நாளை நடைபெறும் சந்திப்பின்போது, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் ஐரோப்பியப் பிரதிநிதிகளும் இணைந்து, உக்ரைனின் எந்தப் பகுதியையும் விட்டுக்கொடுக்க டிரம்ப் ஒப்புக்கொள்ளக் கூடாது என்பதை உறுதிசெய்ய முயல்வார்கள் எனக் எதிர்பார்க்கப்படுகிறது. புடின், டிரம்ப், ஜெலன்ஸ்கி ஆகிய மூவரும் பங்கேற்கும் முத்தரப்பு சந்திப்புக்கும் டிரம்ப் ஆர்வம் தெரிவித்திருந்தாலும், ரஷ்யா இன்னும் அதற்கு பதில் அளிக்கவில்லை.