அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார். "அவர்கள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், நாங்கள் அவர்களை நிராயுதபாணிகளாக்குவோம். அது விரைவாகவும், ஒருவேளை வன்முறையாகவும் நடக்கும்," என்று டிரம்ப் எச்சரித்தார். ஆனால், ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிடுவதற்கான காலக்கெடு எதையும் அவர் தெரிவிக்கவில்லை.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் முற்றிலுமாக கலைக்கப்படும் வரை போர் நிற்காது என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். ஹமாஸ் ஆயுதங்களுடன் இருக்கும் வரை, அது காசாவில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தும் என்றும், தனது இராணுவத் திறன்களை மீண்டும் கட்டியெழுப்ப முயலும் என்றும் இஸ்ரேலியர்கள் கருதுகிறார்கள்.
ஆனால், ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்பதை முழுமையாக ஏற்கவில்லை. மேலும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறி வருகிறது. போர்நிறுத்த காலத்தில் குழப்பம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளத் தாங்கள் விரும்புவதாகவும் ஹமாஸ் கூறுகிறது.