கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், 2025 மேலும் வெப்பமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது உலகளவில் காலநிலை மாற்றம் துரிதப்படுவதற்கான கவலைகளை எழுப்புகிறது. மனிதர்களின் நடவடிக்கைகள் மாறாவிட்டால், பிரச்சனை மோசமடையும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் இதுகுறித்து கவலை தெரிவித்துள்ளார். மேலும், ‘உலகம் இதுபோன்ற ஒரு பத்தாண்டுகாலத்தைப் பார்த்ததில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். உலகின் வெப்பமான 10 ஆண்டுகளில் ஒவ்வொன்றும் தற்போதைய தசாப்தத்தில் உள்ளன. காலநிலை சமநிலை மோசமடைந்து வருகிறது, இது மிகவும் கவலைக்கிடமானது. கார்பன் உமிழ்வுகள் கணிசமாகக் குறைக்கப்படாவிட்டால், தப்பிக்க வழியில்லை’ என்று கூறினார்.
2024 ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாக சாதனை படைத்ததாக ஐ.நா. வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், 2025 இன்னும் வெப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக வானிலை அமைப்பு, ‘மனித நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பேரழிவைத் தவிர்க்க முடியாது.
பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் சாதனை அளவை எட்டும், இதனால் எதிர்காலத்தில் உலக வெப்பநிலை அதிகரிக்கும். கடந்த தசாப்தம் முந்தைய தசாப்தங்களை விட கணிசமாக வெப்பமாக இருப்பதற்குக் காரணம் மனித நடவடிக்கைகள்தான். அதிக வெப்பத்தின் அபாயங்களைக் குறைக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை. அதிக வெப்பம் இப்போது சாதாரண நிகழ்வாகி வருகிறது.’ என்று உலக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஐ.நா. வானிலை நிறுவனத்தின் பொதுச் செயலாளர் செலஸ்டே சவுலோ, காலநிலை மாற்றம் குறித்து சிறப்பு எச்சரிக்கை விடுத்தார் மேலும் பேசிய அவர் “ உயரும் வெப்பநிலை பிரச்சனையை அதிகப்படுத்துகிறது. காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய தாக்கங்களும் அபாயங்களும் அதிகரித்து வருகின்றன.” என்று தெரிவித்தார்.
2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரை, உலக சராசரி வெப்பநிலை தொழில்துறைக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது 1.54 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. 2016 பாரிஸ் ஒப்பந்தம் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை, ஏனெனில் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.