
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தினமும் பல ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சேலம், கோவை, பாலக்காடு வழியாகவும், தேனி, குமுளி வழியாகவும் சபரிமலை செல்லலாம். இது தவிர தமிழ்நாட்டில் இருந்து தென்காசி, செங்கோட்டை, கேரளாவின் ஆரியங்காவு, புனலூர், பத்தனம்திட்டா வழியாகவும் சபரிமலை செல்லலாம். இது மிகவும் பிரதான பாதையாகும். தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் சபரிமலைக்கு செல்லும் பெரும்பாலான பக்தர்கள் இந்த பாதையையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பாதை வழியாக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவிகளில் குளிக்க தவறுவதில்லை. குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளில் குளித்து விட்டு செல்கின்றனர். ஆனால் குற்றாலம் மட்டுமின்றி தென்காசிக்கு அருகில் கேரள மாநிலத்தில் 2 அருமையான அருவிகள் உள்ளன. அது குறித்து தான் இந்த செய்தியில் பார்க்கப்போகிறோம்.
பாலருவி (palaruvi waterfall)
தென்காசியில் இருந்து சுமார் 28 கிமீ தொலைவில் கேரளாவின் ஆரியங்காவு என்ற இடத்தில் பாலருவி அமைந்துள்ளது. சுமார் 300 அடி உயரத்தில் இருந்து பால் போன்று தண்ணீர் கொட்டுவதால் பாலருவி என இதற்கு பெயர் அமைந்துள்ளது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த அருவிக்கு செல்லலாம். அருவியின் முகப்பு பகுதி வரை நாம் நமது வாகனங்களில் செல்ல வேண்டும்.
அங்கு இருந்து அடர்ந்த வனப்பகுதியில் 500 மீ தூரம் உள்ள அருவிக்கு கேரள வனத்துறை வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்வார்கள். இதற்கு பெரியர்வர்களுக்கு ரூ.25ம், சிறுவர்களுக்கு ரூ.10ம் கட்டணம் வசூலிக்கப்படும். அருவியின் முகப்பு பகுதியில் பைக், கார்களை நிறுத்த பார்க்கிங் கட்டணம் உண்டு.
நீண்ட நாள் வாழ்றதுக்காக இப்படிலாமா செய்றாங்க? ஜப்பானியர்களின் '6' நல்ல பழக்கங்கள்!!
எப்படி செல்வது?
சபரிமலையில் இருந்து புனலுர் வழியாக தென்காசி வரும் பாதையில்தான் ஆரியங்காவு அமைந்துள்ளது. இதனால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், அங்கு இருந்து வரும் பக்தர்கள் எளிதாக பாலருவிக்கு செல்லாம். மேலும் அருவியில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவில் புகழ்பெற்ற ஆரியங்காவு ஐயப்பன் கோயிலும் உள்ளது.
தென்காசியில் இருந்தும், புனலூரில் இருந்தும் ஆரியங்காவுக்கு அடிக்கடி பேருந்துகள் உள்ளன. பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவில் அருவியின் முகப்பு பகுதி உள்ளது.
கும்பாவுருட்டி அருவி (Kumbhavurutty Waterfalls)
செங்கோட்டையில் இருந்து கேரளாவின் அச்சன்கோயில் செல்லும் சாலையில் சுமார் 22 கிமீ தொலைவில் கும்பாவுருட்டி அருவி அமைந்துள்ளது. தென்காசியில் இருந்து 26 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கும்பாவுருட்டி அருவியின் முகப்பு பகுதியில் வாகனங்களை நிறுத்தி விட்டு அங்கு இருந்து சுமார் 500 மீ தூரம் வனப்பகுதியில் நடந்து தண்ணீர் கொட்டும் இடத்துக்கு நடந்து செல்ல வேண்டும். அருவிக்கு செல்ல அனுமதி கட்டணம் ஒருவருக்கு ரூ.25 வசூலிக்கப்படும். பார்க்கிங் கட்டணமும் உண்டு.
பெண்கள் மற்றும் குழந்தைகளும் குளிக்கும் வகையில் இந்த அருவி இயற்கையாகவே அமைந்துள்ளது. வனப்பகுதியின் நடுவே நடந்து சென்று அருவியில் ஜாலியாக குளிப்பது மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி தரும்.
எப்படி செல்வது?
செங்கோட்டையில் இருந்து பண்பொழி, மேக்கரை வழியாக வாகனங்களில் இந்த அருவியின் முகப்பு பகுதிக்கு செல்லலாம். செங்கோட்டையில் இருந்து காலை, மாலை நேரங்களில் கேரள பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கும்பாவுருட்டி அருவியில் இருந்து சுமார் 6 கிமீ தொலைவில் அச்சன்கோயில் எனப்படும் ஐயப்பன் கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொண்டை வலிக்கு உடனடி நிவாரணம்.. விரைவில் குணமாக சூப்பர் '3' டிப்ஸ்!