சரிகமப நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதன் ஐந்தாவது சீசனுக்கான பிரம்மாண்ட பைனல் நேற்று கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடத்தப்படுவது போல் ஜீ தமிழில், சரிகமப என்கிற இசை நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. ஜூனியர் சீசன், சீனியர் சீசன் என தனித்தனியாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியின் சீனியர் பாடகர் தேர்வு இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், இந்த ஆண்டு ஐந்தாவது சீசன் தொடங்கி நடத்தப்பட்டு வந்தது. இந்த சீசனை ஸ்ரீனிவாஸ், கார்த்திக் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக வழிநடத்திச் சென்றனர். விஜே அர்ச்சனா தான் இந்த சீசனை தொகுத்து வழங்கினார்.
24
சரிகமப சீசன் 5 பைனல்
இந்த நிலையில் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில், சபேசன், ஸ்ரீஹரி, செந்தமிழன், பவித்ரா, சுசாந்திகா மற்றும் சிவானி ஆகிய ஆறு போட்டியாளர்கள் போட்டியிட்டனர். இவர்கள் இறுதிச்சுற்றில் இரண்டு பாடல்கள் பாடினர். அதில் நடுவர்கள் அளிக்கும் மதிப்பெண் மற்றும் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார். இந்த பைனல் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்கள் தேவா, கங்கை அமரன் ஆகியோருடன் நடிகர் விஷாலும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
34
டைட்டில் வின்னர் யார்?
இந்நிகழ்ச்சியில் சபேசன் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுசாந்திகா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து இரண்டாவது இடம் சபேசனுக்கு கிடைத்தது. மூன்றாவது இடத்தை சின்னு செந்தமிழன் பிடித்தார். இதுதவிர இந்த சீசனில் அதிகம் கவனம் ஈர்த்த போட்டியாளராக இருந்த பவித்ரா, கோல்டன் வாய்ஸ் விருதையும் தட்டிச் சென்றார். ஸ்ரீஹரி மற்றும் சிவானிக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. வெற்றியாளர்களுக்கு இசையமைப்பாளர் தேவா தான் பரிசுகளை வழங்கி கெளரவித்தார்.
அதன்படி டைட்டில் ஜெயித்த சுசாந்திகாவுக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த சபேசனுக்கு ரூ.10 லட்சம் பணம் பரிசாக வழங்கினார்கள். மூன்றாம் இடம்பிடித்த சின்னு செந்தமிழனுக்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்கம் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல் கோல்டன் வாய்ஸாக தேர்வு செய்யப்பட்ட பவித்ராவுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்கம் பரிசாக வழங்கப்பட்டது. விரைவில் சரிகமப ஜூனியர் சீசன் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.